Monday, December 13, 2021

வஞ்சிக்கோட்டை வாலிபன்: ஜெமினியின் கமர்ஷியல் வித்தைக்காரன்!

 

                  கால ஓட்டத்தையும் மீறி அடுத்த தலைமுறையையும் மகிழ்விக்கும் படைப்புகள் வெகு அபூர்வம். குறிப்பாக, பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் இத்தகைய தரத்தைக் கொண்டிருப்பது மிக அரிது.

ஜெமினி ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கியவஞ்சிக்கோட்டை வாலிபன்அந்த வரிசையில் இடம்பெறுகிறது. இது, 1958-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 12-ம் தேதியன்று வெளியானது.

அந்த ஆண்டில் வசூலில் முதலிடத்தைநாடோடி மன்னன்பிடிக்க, இரண்டாமிடத்தைத் தனதாக்கிக் கொண்டதுவஞ்சிக்கோட்டை வாலிபன்’. காதல், வீரம், வன்மம், நகைச்சுவை, சோகம் என்று ஒரு அக்மார்க் மசாலா சினிமாவுக்கான அனைத்து விஷயங்களும் இப்படத்தில் உண்டு.

சிறுவர் சிறுமியர்க்குக் கதை சொல்லும்போது லாஜிக் பற்றி பெரிதாக யோசிக்காமல் கற்பனை நீண்டுகொண்டே செல்லுமே, அந்த டைப்பில்வஞ்சிக்கோட்டை வாலிபன்திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

மையக்கதை முதல் அரை மணி நேரத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுவிட மீதமுள்ள இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நம்மை உற்சாகம் கொள்ள வைப்பது திரைக்கதைதான்.

இத்திரைப்படம் இந்தியில்ராஜ்திலக்என்ற பெயரில் வெளியானது. ஆனால், தமிழில் பெற்ற வெற்றிக்கு மாறாக இந்தியில் படுதோல்வியை தழுவியது.

கால வரையறைக்குள் அடங்காத கதை!

வஞ்சிக்கோட்டை அரசின் திவான் சொக்கலிங்க நாவலர் (டி.கே.சண்முகம்), அரசருக்கு விசுவாசமாக இருப்பவர்.

அரசரின் மைத்துனரான சேனாதிபதி (பி.எஸ்.வீரப்பா), தனது தங்கை அரியணை ஏற வேண்டுமென்ற எண்ணத்தில் கைக்குழந்தையாக இருக்கும் இளவரசரைக் கொல்லத் திட்டமிடுகிறார்.

இதனை அறியும் நாவலர் அரசருக்குத் தெரியப்படுத்த, வீரர்களைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டு அரண்மனைக்குத் தீ வைக்கிறார் சேனாதிபதி. தீயில் இருந்து அரசரின் மகனையும் மகளையும் காப்பாற்றிப் படகில் ஏறித் தப்புகிறார் நாவலர்.

கணவரைத் தேடிவரும் நாவலரின் மனைவி (கண்ணாம்பா) தன் குழந்தைகளைப் படகில் ஏற்றுகிறார். அதில் ஏறும் முன்பாக, சேனாதிபதியின் ஆட்கள் அவரைப் பிடித்து விடுகின்றனர்.

படகில் சென்ற நாவலரின் மகன் சுந்தரலிங்கம் (ஜெமினி கணேசன்) மகள் கவுரியுடன் (விஜயகுமாரி) ஒரு கப்பலைச் சென்றடைகின்றனர். இருவரும் வளர்ந்து அதிலேயே பணிபுரிகின்றனர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, கை நிறைய பொன்னுடன் கவுரியை அழைத்துக்கொண்டு வஞ்சிக்கோட்டைக்கு வருகிறார் சுந்தரலிங்கம். வந்த இடத்தில் சேனாதிபதியின் கொடுங்கண்ணுக்கு கவுரி ஆட்பட, அவரது உயிர் பறிபோகிறது.

பழிக்குப் பழி என்றிறங்கும் சுந்தரலிங்கம் சேனாதிபதியின் வீரர்களிடம் பிடிபட, நடுக்கடலில் இருக்கும் தீவுச் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். சிறையில் அவர் தன் தாயைச் சந்திக்க, எல்லா உண்மைகளும் தெரிய வருகிறது.

சேனாதிபதியைப் பழி வாங்கும் வெறியில் அவர் சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க, அதன்பின் நிகழ்வதெல்லாம் கற்பனையின் எல்லைக்கு அப்பாற்பட்டவை.

கடலில் நீந்திச் செல்லும் சுந்தரலிங்கம் ரத்தினத் தீவுக்குள் நுழைவதும், அதன் இளவரசி மந்தாகினி (வைஜெயந்திமாலா) அவர் மீது காதல்வயப்படுவதும், அவரது ஆதரவுடன் வஞ்சிக்கோட்டைக்கு மீண்டும் செல்வதும் வளைந்தோடும் நதிபோலப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியது.

ஆங்கிலேயர் காலத்தில் வழக்கத்தில் இருந்த பீரங்கிகள், துப்பாக்கிகள் மட்டுமல்லாமல், வீரர்களுக்கான உடையும் அக்கலாசாரத்தைக் காட்டுவதாக அமைந்திருக்கும்.

அதே நேரத்தில் பாளையக்காரர்கள் மற்றும் சமஸ்தானங்களை ஆண்டவர்களின் அடையாளம் எதுவும் படத்தில் இடம்பெற்றிருக்காது.

இது, கதை நிகழும் காலம் வரையறைக்கு உட்படாதது என்பதை வெளிக்காட்டும்.

அலையாடும் திரைக்கதை!

தாயிடம் பேசும் சுந்தரலிங்கம், தந்தை இருக்குமிடம் தேடிச் செல்வோம் என்று உறுதியளிப்பார். அதன்பின்னரே நாவலர் எங்கிருக்கிறார், அவரிடம் வளர்ந்துவரும் இளவரசி பத்மாவும் (பத்மினி) இளவரசரும் எவ்வாறு இருக்கின்றனர் என்பது திரையில் விரியும்.

சுந்தரலிங்கத்தின் தாய், தங்கை இருவரும் படம் தொடங்கி அரை மணி நேரத்துக்குள் மடிந்துவிட, ’அடுத்தது என்ன பழிக்குப் பழி தானேஎன்ற எண்ணம் ரசிகர்களிடம் ஏற்படும். அவர்களது கவனத்தைத் திசை திருப்பும் வகையில் ரத்தினத் தீவு காட்சிகள் இருக்கும்.

அடிமையாக ரத்தினத் தீவுக்குள் நுழையும் சுந்தரலிங்கம்ரோபோபோல இருப்பதும், அவர் மீது மையல் கொள்ளும் மந்தாகினி வம்புக்கு இழுப்பதுமாகக் கலகலப்பாகச் செல்லும் திரைக்கதைராஜா மகள் புது ரோஜா மலர்பாடலின்போது அருவியாகப் பெருகும்.

ரத்தினத் தீவில் இருந்து வெளியேறி வஞ்சிக்கோட்டைக்குள் வணிகராக ஊடுருவும் சுந்தரலிங்கம் தன் தந்தை இருக்குமிடத்தை அறிய முற்படுவதும், சேனாதிபதியின் ஆட்களிடம் இருந்து பத்மாவும் அவரைச் சார்ந்தவர்களும் தப்புவது கதையில் காற்புள்ளிகளைப் பெருகச் செய்யும்.

இப்படிப் பல அடுக்குகள் காட்டப்பட்டு, முடிவில் அவை ஒரு புள்ளியை நோக்கிப் பயணிக்கும்போது ரசிகர்கள் மனதில் பரவசம் ததும்பும்.

கிளைமேக்ஸ் நெருங்கும்போது எங்கே ரத்தினத் தீவு இளவரசியைக் காணோமே என்று ரசிகர்கள் யோசிக்கையில், அவரது ரீ எண்ட்ரி தாண்டவமாக அமையும்.

சினிமாவில் கிளிஷே என்று சொல்லப்படும் பல அம்சங்கள் இத்திரைப்படத்தில் உண்டு. ஆனால், அதுதான் சுவையான திரையனுபவத்துக்குக் காரணமாகிறது என்பதை நாம் மறக்கக் கூடாது!

ஜெமினி கதை இலாகா என்று கதைக்கு கிரெடிட் தரப்பட்டாலும் இப்படத்துக்கு திரைக்கதை எழுதியவர்கள் கொத்தமங்கலம் சுப்பு மற்றும் கே.ஜே.மகாதேவன். சி.சீனிவாசன், கி.ரா. ஆகியோரும் கதை உருவாக்கத்தில் பங்கெடுத்தனர்.

இதன் இந்திப் பதிப்பில் கதை திரைக்கதைக்கான கிரெடிட்டில் சி.சீனிவாசன், கி.ரா. ஆகிய பெயர்களுக்குப் பதிலாக ராமானந்த் சாகரின் பெயர் இடம்பெற்றிருக்கும்.

சபாஷ் சரியான போட்டி!

வஞ்சிக்கோட்டை வாலிபன் என்று சொன்னதுமே, அத்திரைப்படம் பார்த்தவர்கள் மனதில் தோன்றுவதுசபாஷ் சரியான போட்டிஎன்ற வீரப்பாவின் வெண்கலக் குரல் தான்.

இப்படத்தில் பல சுவையான பாடல்கள் இருக்கிறதென்றாலும், இன்று வரை இதன் அடையாளமாக விளங்குவதுகண்ணும் கண்ணும் கலந்து உள்ளம் கொண்டாடுதேபாடல் தான்.

இப்பாடலில் பத்மினியின் பரத அசைவுகளும், வைஜெயந்திமாலாவின் காமரசம் ததும்பும் தாண்டவமும் முடிந்தவரை முழுமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.

அது மட்டுமல்லாமல், இரண்டு நாயகிகள் என்றாலே இது போன்றதொரு பாடல் உண்டா என்று கேட்கும் வழக்கத்தையும் உருவாக்கினார் இயக்குனர் எஸ்.எஸ்.வாசன்.

போட்டிப் பாடல் என்றால் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, இப்பாடலைத் தவிர்த்துவிட்டு வேறு படைப்புகளைச் சிந்திக்க முடியாது.

ஆடை அணிகலன்கள் நடன அசைவுகள் கேமிரா கோணங்கள் என்று பல விஷயங்கள் பத்மினி மற்றும் வைஜெயந்திமாலாவின் அழகை ரசிகர்கள் மனதில் பதிய வைக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஹீராலால் கொரியோகிராபி செய்த இப்பாடல் ஒரு மாதம் படமாக்கப்பட்டது என்றும், வைஜெயந்தி மாலா மற்றும் பத்மினியை தனித்தனியாக முறையே 13, 12 நாட்கள் படம்பிடித்தனர் என்றும், இருவரும் சேர்ந்தாற் போன்ற பகுதிகளை 5 நாட்கள் படம்பிடித்தனர் என்றும் ஒரு தகவல் உண்டு.

இப்பாடல் இந்தியிலும் தமிழிலும் தனித்தனியாக படமாக்கப்பட்டது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஒரு சில காட்சிகளை மட்டும் அந்தந்த மொழிகளில் படமாக்கிவிட்டு, மீதமுள்ளவற்றைச் சேர்த்து ஒரிஜினல் படம் என்று ஏமாற்றும் சூழலில் வாசனின் மெனக்கெடல் போற்றக்கூடியது.

தமிழ் பதிப்பில் வீரப்பா ஏற்ற வேடத்தை இந்தியில் பிரான் ஏற்றிருந்தார். ஸ்டைலிஷான வில்லன் என்ற இமேஜ் அவருக்கு இருந்தாலும், ’அப் பனி பாத்என்று அவர் சொல்வதுசபாஷ் சரியான போட்டிக்கு ஈடாகவில்லை. இந்தி ரசிகர்கள் அதனை ஒருபஞ்ச்ஆகக் கொண்டாடவும் இல்லை.

பின்னாட்களில் பத்திரிகையாளர் ராண்டார் கை கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, வீரப்பாவின் குரல் போலத் தன் குரல் கம்பீரமானது இல்லை என்று அதற்குக் காரணம் சொன்னாராம் பிரான்.

ஆக்ஷன் பாத்திரத்தில் ஜெமினி

மிஸ் மாலினிபடத்தில் துணை நடிகராக அறிமுகமாகிகணவனே கண் கண்ட தெய்வம்மூலமாகத் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் ஜெமினி கணேசன்.

அவரது பெயரில் ஜெமினி இணையக் காரணமே இப்படத்தைத் தயாரித்த ஜெமினி ஸ்டூடியோவில் அவர் பணிபுரிந்ததுதான்.

வஞ்சிகோட்டை வாலிபன்படத்தில் வாள் கொண்டு சண்டையிடும் காட்சிகள் அதிகமிருந்தன. ஷியாம் சுந்தர், பலராம் அமைத்த சண்டைக்காட்சிகளில் தீரத்துடன் தன்னை வெளிப்படுத்தினார் ஜெமினி.

இதுவே பார்த்திபன் கனவு, வீரக்கனல், எல்லாரும் இந்நாட்டு மன்னர், கொஞ்சும் சலங்கை உட்படப் பல்வேறு படங்களில் அவர் ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்கக் காரணமானது. ஆனால், ராஜ்திலக் படத்தின் தோல்விக்குப் பின்னர் ஜெமினி இந்திப்படங்களில் கவனம் செலுத்தவில்லை.

சிருங்காரமும் கவர்ச்சியும்!

தனது கவர்ச்சியான தோற்றத்தால் தமிழ் ரசிகர்களைக் கிறங்கடித்த பத்மினி இப்படத்தில் பெரும்பாலும் சாந்தம் தவழ வலம் வருவார். மாறாக, வைஜெயந்திமாலாவின் சிறு அசைவில் கூட சிருங்காரம் தாண்டவமாடும்.

அவரது அறிமுகம் கூட, அரண்மனை குளத்தில் குளிப்பதில் இருந்துதான் தொடங்கும். கர்வத்தையும் கோபத்தையும் தாண்டி அவரது குளோசப் காட்சிகள் ரசிகர்களைச் சுண்டியிழுக்கும் விதமாக வடிக்கப்பட்டிருக்கும்.

இந்தியில் அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றது கூட இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

பொலிவான தோற்றத்தில் ஜெமினியைக் கண்டதும் கண்களில் பரவசத்தைக் காட்டுவதாகட்டும், ’ராஜா மகள்பாடலில் ஒய்யாரமான அசைவுகளின் மூலமாகக் காதலை வெளிப்படுத்துவதாகட்டும், வைஜெயந்திமாலாவிடம் ததும்பும் கவர்ச்சி அக்கால நாயகிகள் எவரும் வெளிப்படுத்தாதது. இன்று வரை எவரும் பிரதி எடுக்க முடியாதது. அளந்தாற் போன்ற நடிப்பு!

சேனாபதியாக படம் முழுக்க பி.எஸ்.வீரப்பா ஆக்கிரமித்திருக்க மாட்டார். ஆனாலும், அவருக்கான காட்சிகள் அனைத்தும் வேறொருவரால் நிரப்ப முடியாதது.

மலைக்கோட்டையில் நாவலர் சிறை வைக்கப்பட்டிருக்க அவரை விடுவிக்க சுந்தரம் செல்லும்போது, அங்கிருக்கும் காவலரிடம் சேனாபதியின் குரலில் கட்டளையிடுவார்.

வீரப்பாவின் குரலுக்கு என்ன மகிமை என்பதைக் கண்டறிய வேண்டுமானால், இக்காட்சியைத் தியேட்டரில் தரிசித்திருக்க வேண்டும்.

இப்படத்தில் வீரப்பாவுக்கு ஏற்ற கையாள் போலகொத்தவால்எனும் வேடத்தில் டி.கே.ராமச்சந்திரன் நடித்திருப்பார்.

தனித்துவமான குரல், மிரட்டும் விழிகள், அசத்தும் உடல்மொழி என்று பல அம்சங்கள் இருந்தும் அவர் தனக்கான இடத்தைத் தமிழ் திரையுலகில் பெறாமல் போனது துரதிர்ஷ்டம்தான்.

இவர்கள் தவிர தங்கவேலு, முத்துலட்சுமி, எஸ்.வி.சுப்பையா, சுந்தரி பாய் என்று அனைவருமே தங்கள் பங்கைச் சரியாகச் செய்திருப்பர்.

குறிப்பாக, கவுரி பாத்திரத்தில் வெகு இளமையான தோற்றத்தில் விஜயகுமாரி வந்து போவார். பின்னாட்களில் அவர் நாயகியாக நடிக்க இது போன்ற வேடங்கள் தான் அடித்தளமிட்டிருக்க வேண்டும்.

கேள்விக்குள்ளான பிரமாண்டம்!

காட்சிகளில் பிரமாண்டம் தெரிய வேண்டுமென்பதற்காக பணத்தை வாரியிறைக்கக் கூடியவர் எஸ்.எஸ்.வாசன்.

இப்படத்திலும் ரத்தினத்தீவு அறிமுகத்தின்போது, அந்நாட்டு மக்கள் மிகப்பெரிய சிலை முன்பாக ஆடிப்பாடிக் கொண்டாடுவது போலக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அக்காட்சி இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகவே படத்தில் இடம்பெற்றிருக்கும்.

அரண்மனை, சிறைச்சாலைகள், கடை வீதி என்று விதவிதமான செட் படம் முழுக்க உண்டு.

ஆனாலும், குதிரைகள் வந்து போகும் காட்சி, திரளும் மக்கள் கூட்டம், மலைப்பாதையில் பயணிக்கும் சாரட் வண்டி போன்ற சில ஷாட்கள் சந்திரலேகாவில் இருந்து எடுத்தாண்டதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு.

அதேபோல பயணக் காட்சிகளில்பேக் புரொஜக்ஷன்முறை தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது ஒருகட்டத்தில் அலுப்பு தருவதை உணர முடியும்.

சந்திரலேகா’, ‘அவ்வையார்போன்ற பிரமாண்டத் தயாரிப்புகளுக்குப் பெயர் போனதாலேயே, அவற்றைவிட ஒரு படி அதிகமான தரத்தைக் காட்ட முடியாமல் பின்தங்கியதுவஞ்சிக்கோட்டை வாலிபன்’.

டைட்டிலில் வித்தியாசம்!

ஆடை அலங்காரம் எம்.ஜனார்த்தனராவ், சங்கீத கவனம் ஸி.ராமச்சந்திரா, ஓவியக் கற்பனை .கே.சேகர் என்று ஒவ்வொரு துறைக்கான கிரெடிட்டும் இப்படத்தில் வித்தியாசமாகத் தரப்பட்டிருக்கும்.

கலை நிர்மாணம் எம்.எஸ்.ஜானகிராம், அரங்க அமைப்பு பி.ஆர்.என்.ஸ்வாமி என்று தனித்தனியாக பெயர்கள் குறிப்பிட்டபோதிலும், இப்படத்தின் அறிவிக்கப்படாத புரொடக்ஷன் டிசைனராக பணியாற்றினார் .கே.சேகர். இப்படத்தின் துணை தயாரிப்பாளராகவும் அவர் வேலை செய்தார்.

இப்படத்தில் ஒளிப்பதிவு இயக்குனராக பி.எல்லப்பாவும் ஆபரேட்டிவ் கேமிராமேனாக என்.பாலகிருஷ்ணனும் பணிபுரிந்தனர்.

இதேபோல ஒலிப்பதிவு இயக்குனராக ஸி..பிக்ஸும் ஒலிப்பதிவை மேற்கொள்பவராக எஸ்.ஸி.காந்தியும் பணியாற்றினர்.

சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் மிக்ஸிங் என்று பல துறைகள் கிளை விரிப்பதற்கு முன்பே, அது சார்ந்த கலைஞர்களைஉதவிஎன்ற அடைப்புக்குறிக்குள் அடைக்காமல் இருந்தது மிகச்சிறந்த முன்மாதிரி.

தொழில்நுட்பத்தின் அடுத்த படி!

தென்மலை தேக்கு வெட்டி திருநாகை கப்பல் கட்டிஎன்று பாடலுடன் தொடங்கும் வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைக்கதை தொடங்கும். அப்போது, கப்பலில் கௌரியும் அவரது சகோதரர் சுந்தரமும் பணியாற்றுவது காட்டப்படும்.

அப்பாடலின் முடிவிலேயே புயல் கப்பலில் சிக்கிக்கொள்ள, பாய்மரத்தை வெட்டத் தீரத்துடன் மேலேறி வெற்றியை நாட்டுவார் சுந்தரம். அதிலேயே, அவர் அசகாய சூரர் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுவிடும்.

இக்காட்சிகள் அனைத்திலும் கேமிரா அசைந்துகொண்டே இருக்கும். அதோடு, புயலில் சிக்கிய கப்பலின் மினியேச்சரும் கடலும் அற்புதமாகக் கோர்க்கப்பட்டிருக்கும்.

விசேஷக் காட்சிகளை வடிவமைத்த தம்புவுக்கே இதற்கான பாராட்டுகள் சேரும்.

கப்பலுக்குள் படமாக்கப்பட்ட காட்சியிலும் கூட விளக்குகள் அசைந்தாட, கேமிராவும் அசைந்தாட, எத்தகைய உழைப்பை இயக்குனர் குழு காட்டியிருக்கிறது என்பது தெரிய வரும்.

இது போன்ற அனுபவத்தைத் தந்ததனால், ஒரு இயக்குனராக எஸ்.எஸ்.வாசன் கொண்டாடப்பட்ட காலமது.

அதேபோல, விஜயகுமாரி ஆற்றங்கரையில் நீர் மொண்டுவிட்டு கோயிலை வணங்கும் ஷாட்டின் பின்னணியில் படித்துறையில் துவைத்துக் கொண்டிருக்கும் பெண்களும் அக்கரையில் ஒருவர் துணியைக் காய வைத்துக் கொண்டிருப்பதும் காட்டப்படும்.

வெறுமனே ஆற்றங்கரை போன்ற ஓவியப் பின்னணியில் கூட இக்காட்சியை எடுத்திருக்கலாம். ஆனால், உண்மையாகப் பார்க்கும் தோற்றத்திற்காக மெனக்கெட்டதுதான் இயக்குனர் குழுவின் உழைப்புக்குச் சான்று.

இதற்கான பாராட்டு துணை இயக்குனர் சந்துரு, உதவியாளர் கிட்டப்பா மற்றும் பெயர் குறிப்பிடப்படாத பணியாளர்களையே சாரும்.

மழைக்கு நடுவே படகில் குழந்தைகளை விட்டுவிட்டு கரையில் கண்ணம்பா கதறும் காட்சி திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும். குறைவான வசதிகளை வைத்துக்கொண்டு, இது போன்ற திரையனுபவங்களைத் தருவது சாதாரண விஷயமல்ல.

கொண்டாட்டத்தை அளிக்கும் இசை!

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்துக்கு இசையமைத்தவர் சி.ராமச்சந்திரா.

அன்னாசாஹேப், ராம் சிதல்கர், ஷியாமோ ஆகிய பெயர்களிலும் சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் ஒரு பாடகரும் கூட. 1940களில் வெளியான ஜெயக்கொடி, வனமோகினி படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார்.

ராஜா மகள்பாடலின் இடையேதப்பி ஓடாதே தங்கமேஎன்ற வரிகள் வருமிடத்தில் மெட்டு தடம் மாறும்.

அதன்பின்ஆசை எனும் உலகிலேஎன்ற வரிகளின்போது மேலும் புரண்டு மீண்டும்ராஜா மகள்என்று தொடங்கிய இடத்தை வந்தடையும். இப்போதும் இது போன்ற பாடல் அமைப்பை வெகு அரிதாகத்தான் காண முடியும்.

தென்மலை தேக்கு வெட்டி’, ‘வைக்க வண்டி பாரம் நாம் போகும் வழியும் தூரம்பாடல்களிலும் சரி; சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, டி.வி.சுந்தரம், வி.என்.ரத்தினத்துடன் இணைந்து பாடும்தேடித் தேடி அலைகிறேனே’, ‘வெற்றிவேல் வீரவேல்பாடல்களிலும் சரி, திருச்சி லோகநாதனின் குரல் கிண்ணென்று காதில் எதிரொலிக்கும்.

எத்தனை கேள்வி’, ‘இன்பக் கனவொன்று கண்டேனடிபாடல்களில் பி.சுசீலாவை பயன்படுத்திய ராமச்சந்திரா, ‘கண்ணும் கண்ணும் கலந்துபாடலில் பி.லீலாவும் ஜிக்கியும் பாடச் செய்திருப்பார்.

இது தவிர ரத்தினத் தீவுக்கான தீம், தந்தையைத் தேடி சுந்தரம் சிறைக்குச் செல்லும் காட்சியின் நடுவே பத்மினி குழுவினர் ஆடுவதாக வரும் தீம், ’ரத்தினபுரி வியாபாரி ஏலேலசிங்கன் இவரய்யாஉள்ளிட்ட சிறு பாடல்களும் இப்படத்தில் நிறைந்திருக்கும்.

படத்தின் பிரமாண்டத்துக்கு ராமச்சந்திராவின் இசையும் தன் பங்களிப்பை நல்கியிருக்கும்.

ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களும் தமது முயற்சியைக் கொட்டியதாலேயே ஜெமினியின் படைப்புகள் வசூலில் தோல்வியைத் தழுவியிருந்தாலும் கூட இன்றும் குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றன.

ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் வழக்கத்திற்கு மாறான கருத்துக்களை கொண்டிருக்கும் படைப்புகளை, பரீட்சார்த்த முயற்சிகளைத் தங்களது துணை நிறுவனம் மூலமாகத் தயாரிப்பது வழக்கம்.

அதன்படியே, ‘வள்ளியின் செல்வன்உட்படப் பல திரைப்படங்களையுனைடெட் பிலிம் ஆர்ட்ஸ்எனும் பெயரில் தயாரித்தார் எஸ்.எஸ்.வாசன்.

அதே நேரத்தில், ‘ஜெமினி ஸ்டூடியோதயாரிப்பில் வெளியாகும் படங்கள் கமர்ஷியல் மதிப்பிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி வேறொரு எல்லையில் நிற்க வேண்டுமென்று விரும்பினார்.

இப்போது பார்த்தாலும் நல்ல பொழுதுபோக்கைத் தரும்வஞ்சிக்கோட்டை வாலிபன்அதற்கான ஒரு சான்று!

படத்தின் பெயர்: வஞ்சிக்கோட்டை வாலிபன்

கதை: ஜெமினி

கதை இலாகா (கொத்தமங்கலம் சுப்பு, கே.ஜே.மகாதேவன், சி.சீனிவாசன், கி.ரா.)

திரைக்கதை: கே.ஜே.மகாதேவன்

வசனம், பாடல்கள்: கொத்தமங்கலம் சுப்பு

இசை: ஸி.ராமச்சந்திரா

கலை: .கே.சேகர்

ஒளிப்பதிவு இயக்குனர்: பி.எல்லப்பா

ஒலிப்பதிவு இயக்குனர்: ஸி..பிக்ஸ்

படத்தொகுப்பு: என்.ஆர்.கிருஷ்ணஸ்வாமி

தயாரிப்பு: ஜெமினி ஸ்டூடியோ

இயக்கம்: எஸ்.எஸ்.வாசன்

ப்ராசஸிங்: ஜெமினி ஸ்டூடியோஸ் லேபரட்டரி (மேற்பார்வை: கே.வி.ராமன்)

படத்தொகுப்பு: எல்.பாலு

ஸ்டூடியோ: ஜெமினி ஸ்டூடியோ

நடிப்பு: ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலா, பத்மினி, டி.கே.சண்முகம், பி.கண்ணம்பா, தங்கவேலு, முத்துலட்சுமி, பி.எஸ்.வீரப்பா, டி.கே.ராமச்சந்திரன், எஸ்.வி.சுப்பையா, எம்.எஸ்.சுந்தரிபாய் மற்றும் பலர்.

No comments:

Post a Comment