Monday, December 6, 2021

அம்மா வீடு.

 அம்மா வீடு - பூமியில் சொர்க்கம்

காபியை குடிச்சிட்டு இன்னும் கொஞ்ச நேரம் தான் படேன்..என்ன அவசரம்?

அங்க, உன் வீட்லதான் ரெஸ்ட்டே இல்லாம ஓட்டமும் நடையுமா வேலை. இங்க நல்லா ரெஸ்ட்தான் எடேண்டி !

எண்ணை காச்சி தலைத்தேச்சு விடட்டுமா டீஉன் ஷாம்பூ வில வாசனையைத் தவுத்து ஒண்ணும் கிடையாது.. தலைமுடி வேரோடுகொட்டறது தான் மிச்சம்.

உன் தோடு சங்கிலி மூக்குத்தியெல்லாம் கழட்டி குடு...பூந்திக்காயில ஊறவச்சு வாஷ் பண்ணித்தரேன்.

வரும்போதே உன் காட்டன் சாரீஸைக்கொண்டு வந்திருக்கக்கூடாதா?அப்பா மொட்டமாடியில   கஞ்சி போட்டு இஸ்திரிக்கு குடுத்து வாங்கி   வச்சிருப்பார்

 

மருதாணி மரம் துளித்திருக்கு. அரைச்சு இரண்டு கைக்கும் வைக்கட்டுமா டீ கண்ணா?

பத்துமணிக்குத்தான் ப்ரெஷ்ஷா க்ரைண்டர் போட்டேன்.ஒரு பெரிய  டப்பாவுல மாவு எடுத்துக்கோ நாளைக்குப் போகும் போது..

உனக்கு பிடிக்குமேன்னு மார்க்கெட் போய் வாழைப்பூ வாங்கிட்டு வந்தாரு அப்பா.வடையா/ பருப்பு உசிலியா எது பண்ணட்டும் சொல்லு?

நேத்துதான் ஆள்காரனைக்கூப்பிட்டு  மரத்துலேந்து  தேங்கா பறிச்சோம்.. .இரண்டு காயை உடைச்சு பர்பி பண்ணட்டுமா? உன்  வீட்டுகாரருக்கும் பிடிக்குமே! *இந்த தடவையாவது மறக்காம 10 காயாவது எடுத்துட்டு போம்மா*

கடவாப்பல்லு கூச்சமா இருக்குன்னு போனவாரமே போன்ல சொன்னியே.. நம்ம பல் டாக்டர் கிட்ட ஒரு எட்டு அப்பாவோட போய் காமிச்சிக்கோயேன்..

நீ போன முறை வந்தப்போ குடுத்துட்டு போன சுடி மெட்டரியல்  தைச்சு வாங்கி வச்சிருக்கேன். அளவு சரியா இருக்கா, ஆல்ட்ரேஷன் பண்ணனுமான்னு போட்டு  பாத்து சொல்லு.

சாம்பார் மிளகாய்பொடி இருக்கா உனக்கு? புதுசா அரைச்சு தரட்டுமா? இல்ல என்கிட்ட இருக்கறத ஒரு டப்பாவுல தரவா

இது வேணுமா? அது வேணுமா

போதுமா? இன்னும் கொஞ்சம் தரட்டுமா? ரெஸ்ட் எடு

என்ன அவசரம் ? இன்னும் கொஞ்சம் தூங்கு.

இளைச்சுப்போயிட்டே டீ கண்ணா

சாப்பாடு கையில உருட்டி போடவா?

 இப்படியான  தன்னலமற்ற பாசப்பரிவர்தனைகள், நமக்கென ஒரு குடும்பம் ஆனபிறகும் நடக்கிறதெனில் அது சந்தேகமேயின்றி அஃக்மார்க் அம்மா வீடு தான்.

அழையா விருந்தாளியாய்  நாம் அதிகாரம் செலுத்துமிடம் அம்மா வீட்டில் மட்டும் தான்

நமக்கானதொரு குடும்பம்,அதுகுறித்த கவலைகள்,பொறுப்புகள்,கடைமைகள் என எல்லாவற்றையும் மறந்து ,தற்காலிக பொறுப்பற்ற தன்மையில், சின்னதாய் ஒருநாள் சுற்றுலா போல சந்தோஷமாய் நாமிருக்க நமக்கானதொரு இடமல்லவா நம் அம்மா வீடு!! 

பாதி எழுதாமல் வைத்த பாட நோட்டுகள்,போட்டிகளில் வாங்கிக் குவித்த கோப்பைகள்,சான்றிதழ்கள்,பள்ளி கல்லூரிக்காலத்து  அடையாள அட்டைகள்,க்ராஃப்ட் வகுப்பில் சேர்ந்து வாங்கி நிரப்பிய க்ரோஷா ஊசி, வுல்லன் பந்துகள் ,ஃபர் பொம்மைகள், அளவு சிறியதாய் போன நம் ஆடைகள், மேட்சிங் பார்த்து பார்த்து வாங்கிய குடை ஜும்காக்கள், ஹேர் க்ளிப்புகள், நிறம் மாறி ஜவ்வுபோல் ஆன நகப்பூச்சு பாட்டில்கள், தோலுரிந்து திரௌபதிகளாய் ஆன கைப்பைகள் என, நம் வீட்டில்,நம்முடைய அறையில் திருமணத்திற்கு முந்தைய நாள் வரை  உபயோகித்து  விட்டுச் சென்றனவற்றை யெல்லாம்     பொக்கிஷமாய் அருங்காட்சியகம் போல   ரசித்து ரசித்துப் பாதுகாக்கும் இடம் நம் அம்மா வீடு தானே!

மனதை அழுத்தும் பாரமானாலும்,உடலை வருத்தும் உபாதையானாலும் நமக்கான வேடந்தாங்கல்   அம்மாவீடுதானே !

வெறும்கையோடு சென்று கைநிறைய பொருட்களோடு வரக்கூடிய ஒரேஇடம் பூமியில் உண்டெனில் அது அம்மா வீடு மட்டும் தான்

வாயிலில் காலணியை கழட்டியபடியே "ம்மா எனக் குரலெழுப்பி உள்ளே நுழையும் பொழுதே மலையைப்புரட்டும் தெம்பு நமக்குள்  எங்கிருந்துதான் வருகிறதோ ....! இன்று வரை புரியாத ரகசியம்..

திருமணத்திற்குப் பின் அம்மா வீட்டிற்கு செல்வதில் ஆண் பெண் பேதமென்னபெண்களுக்கான ப்ரத்யேக புத்தாக்க முகாம் அம்மா வீடெனில்,

ஆண்களுக்கு  திருமணத்திற்குப் பின்னரும்,புது உறவின்  சுகங்களில் புதைந்து போகாமல், அப்பாவின் நிழலை விட்டு பொறுப்புகளைத் தன்னந்தனியாய் கையாள்வதில் மூழ்கி மறந்து போகாமல் உங்கள் மகனாய்  அதே  பாசத்தோடுதானிருக்கிறேன், என்பதை ஒவ்வொரு முறையும்  உறுதிசெய்யும் பயணம் அது ..

நமக்கு எத்துணை வயதானாலென்ன நம் அம்மா அப்பா  இருக்கும்வரை அவர்களுக்கு  நாம் குழந்தைதான்.

அதே போல்நம் பெற்றோர் வீடு என்னும்  நம் சொர்க்கத்தின் பெயர்  "அம்மா வீடு" தான்..

 கணவன் மனைவிக்குள் புரிதல் என்ற கடவுச்சீட்டு ஒன்று போதும்.....

நமக்குத்தள்ளாட்டம் வரும் வரை/வந்தாலும் அம்மாவீட்டுக்குச்செல்ல தடையேது!?

*நேற்றைய பொழுது அனுபவம்

இன்றைய பொழுது நிச்சயம்

நாளைய பொழுது நம்பிக்கை

நம்பிக்கையோடு இருங்கள்

No comments:

Post a Comment