பொங்கல் திருநாளில் பகலிலும் ஒவ்வொரு திங்கட்கிழமையில் இரவிலும் திறக்கப்படும் பரக்கலகோட்டை பொது ஆவுடையாரை தரிசிப்போம். சகல ஐஸ்வரியங்களையும் பெறுவோம்!
காலையில் கோயிலின் நடை திறந்து உச்சிகால பூஜையை முடித்ததும் நடை சார்த்துவார்கள். பிறகு சாயரட்சை பூஜையானது மாலையில் 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 அல்லது 9 மணிக்கு அர்த்தசாம பூஜையுடன் நடை சார்த்தப்படும். சைவ, வைணவ பேதமில்லாமல் எல்லாக் கோயில்களிலும் இப்படித்தான். அம்மன் கோயில்களிலும் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் இப்படியான நடைமுறைதான். ஆனால், திங்கட்கிழமை மட்டும் இரவில் மட்டும் திறக்கப்படுகிற கோயில் ஒன்று தமிழகத்தில் உள்ளது. இந்தக் கோயிலின் இன்னொரு விசேஷம்... வருடத்தில் ஒரேயொரு நாள் மட்டும்... பொங்கல் திருநாளில் மட்டும் பகலில் திறக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பரக்கலக்கோட்டை. இந்தத்தலத்தின் இறைவன் சிவபெருமான். இறைவனின் திருநாமம் பொது ஆவுடையார். பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் ஆவுடையார் கோயிலானது, வாரந்தோறும் திங்கட்கிழமை இரவில் திறக்கப்படுகிறது. பொங்கல் திருநாளான ஜனவரி 14ம் தேதி பகலிலும் திறக்கப்படுகிறது.
திருச்சிற்றம்பலம்
என்றால் தில்லை சிதம்பரம் திருத்தலத்தைக் குறிக்கும்.
உலகின் அனைத்துத் தலங்களில் உள்ள இறைவனும் அர்த்தசாம பூஜைக்குப் பின்னர் கூடுகிற இடம் சிதம்பரம் திருத்தலம்.
பொய்கைநல்லூரில், வெள்ளால மரத்தடியில் அமர்ந்தபடி, வான்கோபரும் மகாகோபரும் சிதம்பரம் தலத்தைப் பற்றியும் இரவு தரிசனம் குறித்தும் பரவசத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதுதான், ’கடவுளை அடைவதற்கு சிறந்த வழி துறவறமா, இல்லறமா?’ என்று கேள்வி கேட்டுக் கொண்டார்கள். ஒருகட்டத்தில், இருவருக்கும் பெரும் சண்டையாகிப் போனது. இந்திரனை அழைத்தார்கள். எது சரி என்று கேட்டார்கள். ‘இதென்னடா இது, முனிவர் சாபத்துக்கு ஆளாக நேரிடுமே என தவித்தார். ‘தில்லைராஜனிடமே கேட்டால்தான் சரியாக இருக்கும்’ என்று நழுவினார்.
அதன்படி, முனிவர்கள் இருவரும் சிதம்பரம் தலத்துக்குச் சென்றனர். ஆலயத்துக்குள் நுழைந்தனர். சிவனாரைப் பணிந்தனர். தங்களின் சந்தேகத்தைத் தீர்க்கும்படி வேண்டினர்.
அப்போது சிவனார், ‘நீங்கள் இதுவரை தவம் செய்துகொண்டிருந்த வெள்ளால மரத்துக்கு அருகில், உறங்கு புளி, உறங்கா புளி என்று இரண்டு மரங்கள் இருக்கின்றன. அங்கே காத்திருங்கள். இங்கே பூஜை முடிந்ததும் வருகிறேன்’ என அருளினார்.
சிதம்பரம் தலத்தில், பூஜைகள் முடிந்தன. நடை சார்த்தப்பட்டது. பொய்கைநல்லூருக்கு வந்தார் சிவனார். ’இல்லறமாக இருந்தாலும் சரி, துறவறம் போனாலும் சரி... நெறி பிறழாமல் இருக்க வேண்டும். நேர்மையுடன் இருக்க வேண்டும். ஒருமித்த மனதுடன், ஆழ்ந்த சிந்தனையுடன் இருக்கவேண்டும். இவையே போதும்’ என அருளினார் சிவனார்.
‘இங்கேயே இருந்து எங்களையும் எங்களைப் போன்ற முனிவர் பெருமக்களையும் உலகத்து மக்களையும் அருளவேண்டும்’ என வேண்டினார்கள். அதன்படி அந்த வெள்ளால மரத்தில் ஐக்கியமானார். அந்த திருத்தலமே பரக்கலகோட்டை சிவாலயம்.
இரண்டு முனிவர்களுக்கும் பொதுவாக இருந்து, நடுநிலையாக இருந்து சிவனார் அருளியதால், இந்தத் தலத்து இறைவனுக்கு பொது ஆவுடையார் எனும் திருநாமம் அமைந்தது. இரண்டுபேருக்கும் நடுவே, மத்தியஸ்தம் செய்ததால், மத்தியபுரீஸ்வரர் என்று இன்னொரு திருநாமமும் இங்கே குடிகொண்டிருக்கும் ஈசனுக்கு உண்டு.
எல்லா சிவாலயங்களிலும் கருவறையில் சிவலிங்கத் திருமேனி மூலவராக இருப்பதை தரிசிப்போம். இங்கே, கருவறை உண்டு. ஆனால் சிவலிங்கத் திருமேனி இல்லை. வெள்ளால மரமாகவே காட்சி தருகிறார் சிவபெருமான்.
முனிவர் பெருமக்களுக்கு கார்த்திகை மாத சோம வாரத்தில் (திங்கட் கிழமை) அன்று திருக்காட்சி தந்து உபதேசித்து அருளினார். திருக்காட்சி தந்து அருளினார். எனவே வாரந்தோறும் திங்கட்கிழமை இங்கே சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இன்னொரு விஷயம்... சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் சிவனார் இங்கே வந்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 10.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் விமரிசையாக பூஜைகள் இன்னும் விமரிசையாக நடந்தேறும். அம்பாளுக்கு இங்கே சந்நிதி இல்லை. திங்கள்தோறும்
இரவில் திறக்கப்படும் பரக்கலகோட்டை பொது ஆவுடையார் கோயில்,
வருடத்தில் ஒரேயொரு நாள்... பொங்கல் திருநாளில் மட்டும் பகலில் திறக்கப்படுகிறது; அப்போது
அலங்காரமும் சிறப்பு
அபிஷேகமும் நடைபெறுகிறது.
இவரை வேண்டிக் கொண்டு, ஹோட்டல், பேக்கரிக்கடை, துணிக் கடை,நகைக்கடை, என எந்த வியாபாரத்தை துவங்கினாலும் லாபம் அமோகமாக இருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அப்படி வேண்டிக் கொண்டவர்கள், நெல் தருகின்றனர். கம்பு வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தென்னந்தோப்பு வைத்திருப்பவர்கள் தேங்காயையும் மாந்தோப்பு வைத்திருப்பவர்கள் மாங்காயையும் தருகின்றனர். ஆடு, கோழி, மாடு என தருகின்றனர். பேனா, நோட்டுப் புத்தகம் தருகின்றனர். .
பக்தர்கள் வழங்கிய பொருட்களையெல்லாம் பொங்கல் திருநாளின்போது ஏலத்துக்கு விடுவார்கள்.
இதை ஏலம் எடுத்துச் சென்றால், கடன் தொல்லையில் இருந்து மீளலாம். செல்வச் செழிப்புடன் திகழலாம். சகல ஐஸ்வரியங்களுடன் வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள்.
ஸ்ரீவான்கோபர், ஸ்ரீமகாகோபர் ஆகிய இரண்டு முனிவர்களுக்கும், ஆலமரத்தின் ஒரு வகையான வெள்ளால மரத்தடியில் அமர்ந்தபடி,
நடராஜ பெருமான் உபதேசித்து அருளினார். ஆகவே குரு தட்சிணாமூர்த்தியின் சொரூபமாகவே வழிபடுகின்றனர். பொது ஆவுடையாரை வணங்கினால் குருவருள் கிடைக்கப் பெறலாம்.
ஆலயத்தில் கருவறைக் கதவு பித்தளைத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. திறந்ததும் வெள்ளால மரத்தை தரிசிக்கலாம். மேலும், மரத்தில் சிவலிங்க வடிவம் போலவே அலங்கரித்து பூஜைகள் செய்கிறார்கள். அதாவது வாராவாரம் திங்கட்கிழமையில் இரவு மட்டுமே ஆலயத்தின் நடை திறக்கப்படுவதால், பிற நாட்களில் கருவறைக் கதவையே கடவுளாக எண்ணி வழிபட்டுச் செல்கின்றனர் பக்தர்கள்.
பொங்கல் திருநாளில் பகலிலும் ஒவ்வொரு திங்கட்கிழமையில் இரவிலும் திறக்கப்படும் பரக்கலகோட்டை பொது ஆவுடையாரை தரிசிப்போம். சகல ஐஸ்வரியங்களையும் பெறுவோம்!
No comments:
Post a Comment