Followers

Friday, August 28, 2026

சித்திரகுப்தர்

சித்திரகுப்தர்

சித்திரகுப்தர் எப்படி தோன்றினார்? எமதர்மனுக்கு இவர் யார்?


சித்ரா பௌர்ணமி அன்று எண்ணைத் தேய்ச்சிக் குளிக்கணும். நயினார் நோன்பு இது. இந்த நாளில் அப்படி குளிக்காட்டி நம்மை செக்குல போட்டு ஆட்டிடுவாரு நயினாருன்னு சின்ன வயசுல நம்மை எல்லாம் தாத்தா, பாட்டிமார்கள் பயமுறுத்தி வச்சிருப்பாங்க. அதுகூட நம் உடலின் நன்மைக்குத் தான். அப்படி சொன்னா தானே நாமும் அடம்பிடிக்காம தலைக்கு எண்ணைத் தேய்ச்சிக் குளிப்போம்.

இந்த கொளுத்தும் கோடையில் உடலுக்கும் குளிர்ச்சி வேண்டும் அல்லவா... அதனால் தான் அப்படி சொன்னார்கள். இங்கு நயினார் என்பவர் சித்திர புத்திர நயினார் என்று அழைக்கப்படும் சித்திரகுப்தர் தான். இனி விஷயத்துக்கு வருவோம்.

சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி வானியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் ஒரு அதிசயமான நாள். வானத்தில் நிலவு இன்று எந்த ஒரு கலங்கமும் இல்லாமல் முழுப்பொலிவுடன் பூமிக்கு மிக அருகில் வந்து காட்சி தரும். சந்திரனும், சூரியனும் முழு பலம் பெற்று விளங்கும் இந்தத் திருநாளில் நாம் இறைவனை சரணடைவது நம் வாழ்வில் பெரும் மாற்றங்களை உருவாக்கும்.

குறிப்பாக நம் வாழ்வின் பாவ, புண்ணியங்களை நிர்ணயிக்கும் சித்திரகுப்தரை வழிபட வேண்டிய மிக முக்கியமான நாள் இது. சித்திர குப்தர் எப்படி தோன்றினார் தெரியுமா? ஒருமுறை அன்னை பார்வதி தேவி கைலாயத்தில் ஒரு அழகான ஆண்குழந்தையை வரைந்தார். அந்த சித்திரத்தின் அழகில் மயங்கிய ஈசன் அதற்கு உயிர் கொடுத்தார். அந்த ஓவியமே சித்திர குப்தராக உருவெடுத்தது.

சித் என்றால் மனம். குப்த்து என்றால் மறைவு. அதாவது நாம் வெளியே செய்யும் செயல்களை விட நம் மனதுக்குள் மறைந்திருக்கும் எண்ணங்களை கவனிப்பவர் இவர். நாம் யாருமற்ற இடத்தில் ஒரு தவறு செய்தாலும் நம் மனசாட்சியாக இருந்து அதைக் கணக்கெடுப்பவர் இவர். எமதர்மனுக்கு உதவியாளராக இருந்து ஒரு மனிதன் வாழ்ந்த வாழ்க்கையின் கணக்கை நடுநிலையோடு ஆராய்ந்து சொர்க்கமா, நரகமா என்பதை தீர்மானிக்கும் மாபெரும் பொறுப்பு இவருடையதுதான்.

இந்த நாளில் ஆர்ப்பாட்டமான பூஜைகள் தேவையில்லை. மாலையில் வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி சித்திரகுப்தரை மனதார வேண்டிக் கொண்டாலே போதும். அவருக்குப் பிடித்தமான வேப்பம்பூ பச்சடி மற்றும் விதவிதமான கலவை சாதங்களை நைவேத்தியமாக படைக்கலாம். இன்று மிக முக்கியமான விஷயம் தானம். நாம் செய்த பாவங்கள் விலகவும், புண்ணியங்கள் பெருகவும் பசித்து இருப்பவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். குறிப்பாக தயிர் சாதம், புளியோதரை போன்ற கலவை சாதங்களைத் தானமாக வழங்குவது சித்திரகுப்தருக்கு மிகவும் பிடிக்கும்.

இறைவா, தெரிந்தும், தெரியாமலும் செய்த பிழைகளை மன்னித்து இனி என் எண்ணங்களையும் செயல்களையும் தூய்மையாக வைத்திரு என்று நாம் வைக்கும் ஒரு நிமிடம் மௌனபிரார்த்தனை 1000 முறை பூஜை செய்ததற்குச் சமம். சித்ரா பௌர்ணமி என்பது நம்மை நாமே சீர்தூக்கி பார்க்கும் ஒரு நாள். மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் முதல் திருவண்ணாமலை கிரிவலம் வரை இந்த நாள் முழுவதும் தெய்வீக அதிர்வுகள் நிறைந்து இருக்கும்.

சித்திரகுப்தர் நம் கர்மாவின் கணக்காளர் மட்டுமல்ல. அவர் நம் நல்வாழ்வின் வழிகாட்டி. நல்ல எண்ணங்களை விதைப்பொம். நம் வாழ்வின் கணக்குப் புத்தகம் புண்ணியங்களால் நிறையட்டும்.

No comments:

Post a Comment