Sunday, February 4, 2018

வெள்ளித்திரை நாயகி பத்மினி:



வெள்ளித்திரை நாயகி பத்மினி:

                    நடிகைக்கு இலக்கணமான நாட்டியப் பேரொளி பத்மினி திரைவானில் ஜொலித்த திரைதாரகை. அவர் இன்று நம்மிடையே இல்லை. அவரின் நடனத் திறன், விழிகளினுடைய பேச்சு, அபிநய அணுகுமுறை போன்ற கொடைகள் சாகாவரம் பெற்றவை.

                  படித்தவரில் இருந்து பாமரர் வரை அனைவரையும் நடிப்பால் ஈர்த்த அவரின் கலைப்பணி இன்றும் நம் நினைவில்நிற்கிறது. திருவாங்கூர் சகோதரிகள் என்று அழைக்கப்பட்ட சகோதரிகள் லலிதா, ராகினி, பத்மினி ஆவர்.

                      பத்மினி திருவனந்தபுரம் அருகில் உள்ள பூஜாபுரத்தில் 1932ம் ஆண்டு ஜுன் 12ம் தேதி பிறந்தார். பரதம் கற்று 1941ல் சென்னைக்கு வந்து தன்னுடைய அரங்கேற்றத்தை நடத்தினார். “டான்சர் ஆப் இந்தியாஎன்ற குழுவில் இடம்பெற்றார். தனது 17வது வயதில் கல்பனா என்ற இந்தி திரைப்படம் மூலமாகத் தன் வரவை திரை உலகத்தில் பதிவு செய்தார்.

                      1951ல் வெளியான ஏழை படும் பாடு என்ற தமிழ் படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

                        அதன் பின் மணமகள், தூக்குத்தூக்கி, புதையல், உத்தமபுத்திரன், இரு மலர்கள் போன்ற படங்களில் நடித்தார். பணம் என்ற படத்தில் சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்தார். 1956ல் வெளியான அமரதீபம், 1959ல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் 1970ல் வெளியான பெண் தெய்வம், 1970ல் வெளியான வியட்நாம் வீடு போன்ற அரிய திரைப்படங்கள் நாட்டியப் பேரொளியின் நடிப்பாற்றலை உலகுக்குப் பறைசாற்றின. சிவாஜி - பத்மினி ஜோடி மக்களால் வரவேற்கப்பட்டது. 59 படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தனர். அதே போல எம்.ஜி.ஆருடன் மதுரை வீரன், மன்னாதி மன்னன், என்று 13 படங்களில் நடித்தார். ஜெமினி கணேசனுடன் சித்தியில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பூவே பூச்சூடவா என்ற படத்திலும் நடித்து தமிழக ரசிகப் பெருமக்களை மகிழச் செய்தார்.

                       தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 250 படங்களில் நடித்துள்ளார். 1957ம் ஆண்டில் மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் விழாவில் பங்கேற்று விருதைப் பெற்றார். அன்றைய சோவியத் அரசு இவருடைய தபால் தலையை வெளியிட்டது. 1958ல் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார். பண்டித ஜவஹர்லால் நேருவின் பாராட்டுதல்களையும் பெற்றார்.

                          கொத்தமங்கலம் சுப்புவின், தில்லானா மோகனாம்பாள் என்ற பாத்திரத்திற்கு பத்மினி தன் நடிப்பாற்றலால் உயிர் கொடுத்தார். அதேபோன்று வை.மு. கோதைநாயகியின் படைப்பு பத்மினியின் சித்தி என்ற உருவத்தில் இன்றைக்கும் பேசப்படுகிறது.

                   வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினியும், வைஜெயந்தி மாலாவும் ஆடும்சாதுர்யம் பேசாதடி என் சலங்கைக்குப் பதில் சொல்லடிஎன்ற போட்டா போட்டி நாட்டியம் இன்றும் பலரின் நினைவுகளில் இருக்கின்றது.

                       பத்மினி இந்திப் பட உலகிலும் கொடிகட்டிப் பறந்தார். 1970ல் வெளியான மேரா நாம் ஜோக்கர் போன்ற படங்கள் இந்தி ரசிகர்களையும் கவர்ந்தன.

                     இவ்வளவு கலைச் சிகரங்களைத் தொட்ட பத்மினி அவர்கள் டாக்டர் கே. டி. ராமச்சந்திரனை 1961ல் கரம் தொட்டு அமெரிக்கா சென்று நியூஜெர்சியில் நடனப் பள்ளியை நடத்தினார். அவருடைய புதல்வர் பிரேம் ஆனந்த்தோடு அங்கு வாழ்ந்துவிட்டு இறுதிக் காலத்தில் சென்னை மண்ணில் வாழ வேண்டும் என்று வந்தவரை இயற்கை தன் பக்கம் அழைத்துக் கொண்டது. பத்மினியின் புகழ் வாழ அவர் குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது இன்றைய கலை உலகப் பிரமுகர்களுக்கு உதவியாக இருக்கும்.

                      அவருடைய ஓய்வில்லாத நிகழ்ச்சிகளும், உணவுக் கட்டுப்பாடு இல்லாமையும் பத்மினியைத் தமிழ் மண்ணிலிருந்து இயற்கை பிரித்துவிட்டது.

No comments:

Post a Comment