Wednesday, February 28, 2018

பேசுவது கிளியா ?



பேசுவது கிளியா ?

ஒருவர் தன் வீட்டில் வளர்க்க கிளி வாங்க விரும்பினார். தன் வெகு நாள் ஆசையை பூர்த்தி செய்ய கிளிகள் விற்கும் கடைக்கு சென்றார். பல்வேறு வடிவில், நிறங்களில் அங்கு கிளிகள் இருந்தன. அங்குள்ள விற்பனையாளனிடம் சென்று விசாரிக்க துவங்கினார்.

சில கிளிகளின் கழுத்தில் ஆயிரம், இரண்டாயிரம் என விலை தகடுகள் மாட்டி இருந்தன. அவர் பார்வையிட்டு கொண்டே போனார். அப்போது சில கிளிகள் கழுத்தில் நம்ப முடியாத விலைகள் காணப்பட்டன. ஆச்சரியத்துடன் அவர் விற்பனையாளனிடம் விசாரித்தார்.

"ஏன்ப்பா ! இந்த கிளி அப்படி என்ன செய்யும், இருபதாயிரம்னு விலை போட்டு இருக்கே ? " என கேட்டார்

அதற்கு அந்த விற்பனையாளன்

"சார், இந்த கிளிக்கு பகவத் கீதை மனப்பாடமா தெரியும் சார். அப்படியே ஒப்பிக்கும்." என கூறினான்.

"அப்படியா ? பரவா இல்லையே ! சரி அந்த கிளி கழுத்துல முப்பதாயிரம் விலை போட்டு இருக்கே, அது என்ன பண்ணும் ? " என விசாரித்தார்.

"சார், அது இன்னும் சூப்பர் கிளி சார். கீதை, குரான், பைபிள் எல்லாம் அர்த்ததோட சொல்லும் சார்"

"அஹா ! அதிசயமனான கிளிதான்ப்பா" என கூறி மேலும் பார்வையிடும் பொழுது ஒரு சிறிய நோஞ்சான் கிளி கழுத்தில் ஒரு லட்சம் என்ற விலையை கண்டார்.

"என்னப்பா, இந்த கிளி பாக்குறதுக்கே நல்லா இல்லயே, ரொம்ப சின்னதா, நோஞ்சானா வேற இருக்கு, இதுக்கு எதுக்குப்பா ஒரு லட்சம் ? இது அப்படி என்னப்பா ஸ்பெஷலா செய்யும் ? " என கேட்டார்.

அந்த விற்பனையாளன் " சார் ! எனக்கு தெரிஞ்சி இதுக்கு கீதை, குரான் எல்லாம் சொல்ல தெரியாது. சும்மா தான் இருக்கும். இறக்கை கூட உதிர்ந்து போச்சு. ஆனா , அந்த ரெண்டு கிளியும் இத தான் "எஜமான்" னு கூப்பிடும் சார் !, அதுக்காக தான் சார் இது விலை ஒரு லட்சம்" என போட்டானே ஒரு போடு. நம் ஆசாமி மயங்கியே விட்டார்.

நீதி : பதவிக்கும் , அறிவிற்க்கும் தொடர்பில்லை !

No comments:

Post a Comment