Friday, February 2, 2018

"மெல்லத் தமிழினிச் சாகும்...?"



"மெல்லத் தமிழினிச் சாகும்...?" 


மஹாகவி பாரதியாரைப் பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என்ற நிலை உண்டாகிவிட்டது.
மேடை மீது ஏறி நின்று கொண்டு,"மெல்லத் தமிழினிச் சாகும்...' என்று பாரதியே சொல்லிவிட்டான்" என்று பேசக் கூடியவர்கள் பலர் உள்ளனர். ஒரு கூட்டத்தில் கவிஞர்(?) கனிமொழி அவ்வாறு திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறார்.
பாரதி அவ்வாறு கூறவில்லை என்று இவர்களுக்கு எத்தனை முறை கூறினாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்..!
உண்மையில் பாரதி தமிழன்னையின் கூற்றாக அப்படிச்சொல்கிறார்.
 'யாரோ ஒரு பேதை அப்படிச் சொல்கிறான்.அவன் கூற்றினைப் பொய்யாக்குங்குள்' என்று தமிழருக்கு ஆணையிடுகிறாள் தமிழன்னை.

பாடல் வரிகள் இதோ:

"கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம் என்னென்னவோ பெயருண்டு - பின்னர் யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!
தந்தை அருள் வலியாலும் - முன்பு சான்ற புலவர் தவ வலியாலும் இந்தக் கணமட்டும் காலன் - என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்! கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!
"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் பேதை யுரைத்தான் - ! இந்த வசை எனக்கெய்திடலாமோ? சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
தந்தை அருள் வலியாலும் - இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் இந்தப் பெரும்பழி தீரும் - புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."
கூறியவனை 'கூறத்தகாதவன்' என்றும், 'அந்தப் பேதை' என்றும் சொலவதைப் பாருங்கள்."நான் சொல்வதைக் கேட்டு செயல் பட்டால்
"புவிமிசை என்றும் இருப்பேன்" என்றும் தமிழன்னை கூறுகிறாள்.கவனியுங்கள்.

ஆனால் தாய்த் தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வியின் மோகம் வளர்ந்துள்ள இந்நாளில், தமிழ் வளர்ச்சி பற்றி இலங்கைத் தமிழர்களோ, வேறு மேலை நாட்டுத் தமிழ் அறிஞர்களோ கவலைப் ட்டால்தான் உண்டு.
தமிழ் இனக் காவலர்களுக்கு அவர்களுடைய சொந்தப் பிரச்சனைகளும்,சொந்த பந்தங்களைப் பற்றிய பிரச்சனைகளுமே அதிகமாக உள்ளது.

 

No comments:

Post a Comment