ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் மிகச்சிறந்த சீடரான சுவாமி பரமார்த்தானந்தா சபரி மலையின் 18 படிகளுக்கும் 18 விதிமுறைகளை விளக்கி நாம் எப்படி மோட்சத்தை அடையலாம் என்று வழி காட்டுகிறார்.
1ம் படி -அஹிம்சை : உடலாலோ, வாக்காலோ அல்லது மனதளவிலோ கூட பிறரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பது அஹிம்சை.
2ம் படி - வாய்மை : பொய் சொல்லாமல் இருக்க வேண்டும். நேர்மையாக நடக்க வேண்டும் இது வாய்மை.
3ம் படி - திருடாமை : பிறர் பொருளை அபகரிப்பது மட்டும் திருட்டு அல்ல. பிறருக்கு நியாயமாக சேரவேண்டியதை, தர வேண்டியதை கொடுக்காமல் இருப்பதும்/குறைத்து கொடுப்பதும் கூட திருட்டே ஆகும்.
4ம் படி - ப்ரஹமசர்யம் : குடும்பஸ்தராக இருந்த போதிலும் இந்த விரத நாட்களில் பிரம்மச் சர்யத்தை கடைபிடிக்க வேண்டும்.
5ம் படி - பிறர் பொருள் விரும்பாமை: நமக்கு சேர வேண்டியது அல்லாத, இலவசமாக பிறர் கொடுக்கும் எதையும் பெற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும் .
6ம் படி - சுத்தம் : உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். உடல் தூய்மைக்கு 2 வேளை குளிக்க வேண்டும். உள்ளத் தூய்மைக்கு பூஜை, இறைவனை போற்றுதல் போன்றவற்றை தவறாமல் செய்ய வேண்டும்.
7ம் படி - மனநிறைவு : நம்மிடம் இருப்பதில் திருப்தி அடைவது, அத்யாவசிய பொருள்களை தவிர மற்றவற்றை நாடாமல் இருப்பது.
8ம் படி - தவம் : உணவு விரதங்கள், செருப்பு போடாமல் இருத்தல் போன்ற நியமங்களை முழு ஈடுபாட்டுடன் கடைபிடிக்க வேண்டும்.
9ம் படி - சாஸ்திரம் படித்தல் : வேதங்கள், பகவத்கீதை, பாகவதம், இராமாயணம், மகாபாரதம், ஐயப்ப சரிதம், தேவாரம், திருவாசகம் போன்ற சாஸ்திரங்களை (எந்த மொழியிலும் ) தினமும் படிக்க வேண்டும்.
10ம் படி - அடைக்கலம் : பொருள் மற்றும் உறவுகளைவிட பகவானையே சகலமும் என சரணடைய வேண்டும்.
11ம் படி - த்யானத்தில் அமர்தல் : சுத்தமான இடத்தில் நேராக, ஸ்திரமாக, சுகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
12ம் படி - சுவாசப்பயிற்சி : 12 முறை மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியே விட வேண்டும் .
13ம் படி - புலன் அடக்கம் : ஐம்புலன்களை உலக விஷயங்களின்பால் செலுத்தாமல் இருக்க வேண்டும் .
14ம் படி -இறைவனுடன் ஒன்றுதல்: அலைபாயும் மனதை இறைவனிடம் மட்டுமே செலுத்துதல்.
15ம் படி - த்யானம் : இறைவனின்பால் செலுத்திய மனதை தொடர்ந்து அதே நிலையில் வைத்திருத்தல் .
16ம் படி - ஸமாதி நிலை : இறைச் சிந்தனையை தவிர வேறெதுவுமற்ற நிலையில் ஆழ்ந்து இருத்தல்.
17ம் படி - பாபத்தை துறத்தல்.
18ம் படி - புண்ணியத்தை துறத்தல்.
மேலே சொன்னவற்றில் 16 படிகளை கடப்பது நம் முயற்சியில் உள்ளது. 16 படிகளை சிரத்தையுடன் கடந்தால் 17-18 ம் படிகளை கடக்க ஐயப்பனே நம் கைபிடித்து அழைத்துச் செல்வார்.
நெய் அபிஷேகம் இறைவனுடன் நமது ஐக்கியத்தை விளக்கும் . சபரிமலை ஐயப்பனே ஆதிகுரு . தர்ம சாஸ்தா என்றால் - சாஸ்திரத்தை கற்பிக்கும் குரு. குருவான அவரே ஸ்வாமியாகவும் இருப்பதால் நம் எல்லோருக்கும் குருஸ்வாமியாக இருக்கிறார். சரி ஏன் இந்த விரதத்தை குறிப்பிட 48/60 நாட்களில் மேற்கொள்ள வேண்டும்? பரீட்சார்த்தமாக இந்த கால கட்டத்தில் நாம் முயற்சி செய்து வெற்றி பெறுவதால் , பிறகு அதை ஆண்டு முழுவதற்கும் நீட்டிக்கலாம். பிறகு வாழ்நாள் முழுவதும் அதை கடைபிடித்து இந்த வாழ்வில் முழுமை பெறலாம்.
ஐயப்பன்காட்டும் சின் முத்திரையில், கட்டைவிரல் பரமாத்மாவை குறிக்கிறது. ஆள்காட்டி விரல் ஜீவாத்மாவை குறிக்கிறது . கட்டைவிரலும் ஆள்காட்டி விரலும் சேரும் பொழுது வாழ்க்கை பூரணமடைகிறது. இந்த ஜீவ, பிரம்ம ஐக்கியத்தை குறிப்பது சின் முத்ரா. அதுவே நாம் பதினெட்டு படிகளையும் கடந்தவுடன் காணும் "தத்துவமஸி " (அதுவே நீயாக இருக்கிறாய்).
No comments:
Post a Comment