Monday, January 15, 2018

கணக்கினால் தவறிய காதல்



கணக்கினால் தவறிய காதல்
 


கணக்கில் தவறு செய்ததால் காதல் பாடத்தில் ஒரு கவிஞன் தோற்றான்.காதலிப்பவர்களுக்கு ஒரு காவியம் கிடைத்தது...

இதோ அந்த காதல் தோற்றதும் காவியம் பிறந்ததும்....

குலோத்துங்கச் சோழன் மகள் அமராவதியைப் பார்த்துக் காதல் கொள்கிறான் கம்பரின் மகன் அம்பிகாபதி. அரசன் குலோத்துங்க சோழன் கோபம் கொண்டு, அம்பிகாபதியிடம் காதலை மறந்து விடும்படி கேட்கிறான். அம்பிகாபதிக்கும் அமராவதிக்கும் மனம் ஒத்த தெய்வீக காதல் இருந்தமையால் அரசனின் ஆணைக்குக் கீழ்ப்படிய இருவருமே மறுக்கின்றனர். சோழன் காதலுக்கு ஒரு போட்டி வைக்கிறான். நூறு கவிதை காமரசம் இல்லாமல் அடுத்தடுத்து பாடவேண்டும், நடுவில் காமரசம் வந்தால் மரணதண்டனை என்று அறிவிக்கிறான். அம்பிகாபதியும் தன் காதல் மேல் அத்தனை நம்பிக்கையுடன் போட்டிக்கு ஒப்புக்கொள்கிறான். சபை கூடுகிறது. புலவர் ஒட்டக்கூத்தரும் அவையில் இருக்கிறார், காதலி அமாராவதியோ திரை மறைவில் தன் காதலுக்கு ஜெயம் உண்டாகப் பிரார்த்தனை செய்கிறாள். பாடல் ஆரம்பமாகிறது. கவியரசர் கம்பரும் அங்கே மன வருத்தத்துடன் இருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் அமராவதி கைகளில் இருக்கும் பூக்களிலிருந்து ஒரு பூவை எடுத்து வைக்கிறாள். நூறாவது பாடலும் வந்தது வெற்றிக்களிப்பில் அமராவதி தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திரை மறைவிலிருந்து ஓடி வருகிறாள். அவள் அழகில் அம்பிகாபதி தன்னை மறந்து

"சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்
துற்றே அசையக் குழையூசலாட துவள் கொள் செவ்வாய்
நற்றேனிழொழுக நடன சிங்கார நடையழகில்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே"

என்று பாட
அவ்வளவுதான், ஒட்டக்கூத்தர் "முதல் செய்யுள் காப்புச் செய்யுள் ஆகையால் அதைத் தவிர்த்து 99 பாடல்கள்தான் ஆகிறது. ஆகையால் இவன் போட்டியில் ஜெயிக்கவில்லை" என்றார். சோழனும் உடனே மரணதண்டனை பிரகடனம் செய்தான். மரணதண்டனை ஒருவருக்கும் தெரியாமல் நிறைவேற்றப் படுகிறது. தன் உயிர்க் காதலன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு அமராவதி தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.

பாடல்களை அமராவதி சரியாக எண்ணியிருந்தால் காதல் வென்றிருக்கும்.ஒரு காவியம் தோன்றாமல் போயிருக்கும்.
இக்கால காதலருக்கும் இதில் ஒரு செய்தி ஒளிந்திருக்கிறது.காதலில் வெல்ல கடைசி வரை தாக்குபிடிக்கவேண்டும்.சிறிய பிசகு கூட தோல்விக்கு இட்டு செல்லலாம்.

No comments:

Post a Comment