Thursday, January 25, 2018

காணமல் போன பொங்கல் வாழ்த்து அட்டைகள்...



காணமல் போன பொங்கல் வாழ்த்து அட்டைகள்... 

 


       இப்போது எல்லாம் கடிதங்கள் வருவது மிக குறைந்துவிட்டது. வங்கியின் ஸ்டேட்மெண்ட் மற்றும் பணபரிவர்த்தனைக்கான அட்டைகள் மட்டுமே கடிதங்களாக வருகின்றன அதுவும் கூரியரில் தான் வருகின்றது.
பொங்கல் அட்டைகளை வாங்க காசு சேர்த்த காலம் எல்லாம் உண்டு. பொங்கல் வாழ்த்து அட்டை வாங்க அதற்கு காசு சேர்க்க ஆகும் ஒரு வாரம். சித்தப்பன், பெரியப்பன், அங்காளி பங்காளி எல்லாம் வீட்டை சுற்றி இருப்பதால்  பொங்கல் அட்டைகள் அனுப்புவது அதிகபட்சம் தாய்மாமாவிற்கும், தாத்தாவிற்குமாகத்தான் இருக்கும்.
             25 பைசாவிற்கு பொங்கல் அட்டை வாங்கி அதில் 5 பைசா ஸ்டாம் ஒட்டி ஊருக்கு நடுவில் இருக்கும் தபால் பெட்டியில் போட்டு அதை தபால்காரர் எடுக்கும் போது பார்த்து பரவசம் அடையும் தருணங்கள் எல்லாம் மீண்டும் கிட்டாது
              பொங்கலுக்கு 2 நாள் முன் பள்ளிவிட்டு வந்ததும் எனக்கு வந்த வாழ்த்தை கையில் வைத்துக்கொண்டு பக்கத்து வீடு, எதிர்த்த வீடு மற்றும் கில்லி விளையாட அழைக்கும் நண்பர்கள் என ஒவ்வொருவரிடம் அதை காண்பித்து அதில் காணும் சுகத்திற்கு தான் எல்லையே இல்லை.
                     நமக்கும் எதாவது நண்பர்கள் அனுப்புவார்கள் என்று ஆசையோடு காத்திருந்த தருணம் அது. நமக்கு அனுப்பினால் அவர்களுக்கு திருப்பி நாம் அனுப்பவேண்டுமே என எங்கு நல்ல வாழ்த்து அட்டை கிடைக்கும் என்று நடிகர்கள் படம் கொண்ட வாழ்த்து, முருகன், விநாயகர், சரஸ்வதி என பக்தி மயமான வாழ்த்து, அரசியல் தலைவர்கள் வாழ்த்து, ஜிகினா ஒட்டியது, உள்ளே விரித்தால் சாமி தெரியுற மாதிரி இருக்கும் அந்த வாழ்த்து, எம்ஜிஆர், கலைஞர், ரஜினி, கமல் போட்ட வாழ்த்து என புதிய உலகமாக இருந்தது   இன்று டெக்னாலஜி வளர்ந்து வாழ்த்து அட்டை காணமல் போனது வருத்தமாக இருந்தாலும் அதன் நினைவுகள் சுகமானதே....
 

No comments:

Post a Comment