Tuesday, January 30, 2018

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்



ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்






           மகாவிஷ்ணு , சிவபெருமான் ஆகிய இருவரின் அருளால் 1836 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் திகதியன்று மேற்கு வங்காளத்தில் உள்ள குமார்பூர் என்ற கிராமத்தில் குடிராம் - சந்திராமணி என்ற தம்பதியருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மகனாக பிறந்தார் . குழந்தைப் பருவத்தில் அவர் கதாதர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் . கதாதர் தக் ஷினேஸ்வரில் தஞ்சமடைந்த போது ராமகிருஷ்ணர் என்ற பெயரைப் பெற்றார் .

             படிப்பில் நாட்டமில்லாத ராமகிருஷ்ணர் பஜனைகள் , புராணக் கதைகள் , ஓவியம் ஆகியவற்றில் ஆர்வத்தைக் காட்டினார் . ஆறாவது வயதில் கருமேகங்களுக்கிடையே சிவபெருமான் அவருடைய கண்களுக்கு காட்சி கொடுத்ததால் அன்றிலிருந்து இறைவனை நேரில் காணவேண்டுமென்ற ஆர்வத்தால் கடுந்தவம் செய்தார் .

                        1843 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ணர் தந்தையை இழந்து மூத்த சகோதரனுடன் தக் ஷினேஸ்வரில் தஞ்சம் அடைந்தார் . அங்குள்ள பிரபலமான காளி கோயிலின் பொறுப்பை மகாராணி ரசமணி ராமகிருஷ்ணரின் மூத்த சகோதரனிடம் ஒப்படைத்தார் . ராமகிருஷ்ணரும் சகோதரனுடன் இணைந்து உதவி செய்தார் . ஒருநாள் அந்தக் கோயிலில் உள்ள கிருஷ்ணர் சிலையை வேறிடத்தில் வைப்பதற்கு தூக்கி எடுக்கும்போது கைதவறி விழுந்ததால் சிலையின் கால்கள் தனியாக பிரிந்தன . ராமகிருஷ்ணர் உடைந்த கால்களை சிலையோடு ஓட்ட வைத்து, அதே சிலையை மீண்டும் சன்னிதியில் வைத்து தானும் பூஜித்து , மக்களையும் பூஜிக்க வைத்தார் .

             சில காலங்களுக்கு பிறகு அவருடைய மூத்த சகோதரனும் உயிர் நீத்தார் . அதன் பிறகு கோயில் பொறுப்புகளை மகாராணியின் மருமகன் ராமகிருஷ்ணரிடம் ஒப்படைத்தார் . காளிதேவியை நேரில் காணவேண்டுமென்று எண்ணம் கொண்ட துடிப்பில் ராமகிருஷ்ணர் ஆறு வருட காலமாக தன்னைப் பற்றி சிந்திக்காமல் எப்போதும் காளிதேவியையே ஸ்மரணம் செய்து கொண்டிருந்தார் . ஒருநாள் கோபம் கொண்டு ராமகிருஷ்ணர் தன்னுடைய உயிரை நீத்துக் கொள்வதற்கு முயற்சித்த போது காளிதேவி அவர் எதிரே தோன்றினாள். அவருடைய பக்தியில் பரவசமடைந்து தேவி அருள் கொடுத்து மறைந்தாள். 23 ஆம் வயதில் ராமகிருஷ்ணருக்கு ஸ்ரத்தாமணி என்பவருடன் திருமணம் நடை பெற்றது. திருமணத்திற்கு பிறகும் ராமகிருஷ்ணர் பக்தி, ஆன்மீக மார்கத்தில் தீவிரமடைந்தார் .

               பைரவி பிரம்மணி என்ற குருமாதாவிடம் சேர்ந்த ராமகிருஷ்ணர் குண்டலினி , அஷ்டசித்தி , தாந்திரகம் ஆகியவற்றை கற்றுக் கொண்டார் . வைணவம் , சைவம் ஆகிய இரு சம்பிரதாயங்களிலும் தேர்ச்சி பெற்ற ராமகிருஷ்ண பரமஹம்சர் தனக்குள்ளிருக்கும் பரமாத்மாவை கண்டு மகிழ்ந்தார் . அனுமன் முதன் முறையாக சீதாவை கண்ட அனுபவத்தை ராமகிருஷ்ணர் உணர்ந்தார் . தனக்குள் இருக்கும் பரமாத்மாவே இறைவன் என்ற உண்மையை அறிந்து கொண்ட ராமகிருஷ்ணர் இந்த அற்புதமான அனுபவத்தை மக்களோடு பகிந்து கொண்டார் . தன்னுடைய சிஷ்யனான நரேந்திரதத் என்பவருக்கு தன்னிடமிருக்கும் சக்தியை ஒப்படைத்து விட்டு 1886 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 ஆம் திகதியன்று ஒளிவடிவமாக நரேந்திர ஆன்மாவோடு கலந்தார் . அன்றிலிருந்து நரேந்திரதத் என்ற இளைஞர் விவேகானந்தர் என்ற பெயரால் உலகத்திற்கு அறிமுகமானார் . பரமஹம்சர் புகழ்பெற்ற ராமகிருஷ்ண உபநிஷதங்கள் என்ற நூலை இயற்றிய பெருமையைப் பெற்றார் .
 

No comments:

Post a Comment