Friday, January 5, 2018

'மேயோனைஸ்’ சாஸ்


'மேயோனைஸ்சாஸ்



              மேற்கு ஐரோப்பாவைப் பூர்விகமாகக் கொண்ட 'மேயோனைஸ்சாஸ் (Mayonnaise), இப்போது சிந்துபூந்துறைச் சித்தப்பா வீட்டு உணவு மேஜை வரை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறது. காய்ச்சல் கண்டபோது மட்டுமே பார்த்திருந்த ரொட்டியை, நீளவாக்கில் பிளந்து அதில் மேயோனைஸைத் தடவி சிலபல காய்கறிகளை நுழைத்து, கூடுதல் சீஸையும் பிதுக்கி, வாய் வலிக்கப் பிளந்து சாப்பிடும் கலாசாரம் இங்கே வேகமாகப் பரவுகிறது.
     
                       'பாலும் கீரையும் ஒன்றாகச் சேரக் கூடாது. பாலும் மீனும் ஒன்றாகச் சேரக் கூடாது. தயிருடன் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது. தயிருடன் இறைச்சி நஞ்சாகும்என சித்த மருத்துவம் சொல்லும் தமிழர் உணவு விதிகளை, குழந்தைகள் உலகத்தில் விதைக்காமலேயே கடந்து சென்றுகொண்டிருக்கிறோம்.

                          எண்ணெய், பால், முட்டை, வினிகர், பதப் பொருள்கள், சுவையூட்டிகள் முதலான பல ரசாயனங்களின் கலவையாக எமல்சிஃபை செய்யப்பட்ட பொருளே 'மேயோனைஸ்’. அதிகளவிலான டிரான்ஸ் ஃபேட்டும், ரத்த நாளங்களில் படியும் கெட்டக் கொழுப்பையும் தரும் அந்த சாஸ், நம் சீதோஷ்ண நிலைக்கும் ஜீரண சுழற்சிக்கும் எப்போதும் பழக்கமானது அல்ல. அதோடு, என்றோ எப்போதோ எங்கேயோ செத்த பிராய்லர் கோழி இறைச்சி, பெருங்கடல் மீன் இறைச்சி அல்லது உருளை மசியல்களை, அந்தப் பால் எண்ணெய் பொருளில் தோய்த்துச் சாப்பிடுவது தற்காலிகமாகச் சந்தோஷப்படுத்தினாலும்(?), நெடுங்காலத்தில் நிச்சயம் சங்கடப்படுத்தும். இந்த மேயோனைஸ், கட்டக் கடைசியாக சாப்பாட்டின் மேல் ஒரு கோட்டிங் தடவி ருசி சேர்க்க உதவும் ஒரு பொருள். ஆனால், நம் பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் சமைத்த பின் கடைசியாகச் சேர்த்த விஷயமே வேறு. அப்படி நம் முன்னோர்கள் சேர்த்தது மணம் மட்டுமல்ல, மருத்துவத்தையும்தான்.

சாம்பாரோ, வத்தக்குழம்போ, வாழைக்காய் பொரியலோ அதில் போடும் பெருங்காயத் தூளே அந்த மருத்துவம். பெருங்காயம், ஒரு தாவர ரெசின். அதன் கந்தக மணத்தைப் பார்த்த அமெரிக்கர்கள் விஷயம் புரியாமல் முதலில் அதனை, 'பிசாசு மலம்’ (Devil dung) என்று முகம் சுளித்தனர். 1918-ல் உலகில் 20 மாதங்கள் கட்டுக்கடங்காமல் 100 மில்லியன் மக்கள் 'ஸ்பானிஷ் ஃப்ளூநோயில் கொத்துக்கொத்தாக இறந்தபோது, பெருங்காயம் இந்தக் காய்ச்சலில் இருந்து காக்கும் எனக் கண்டறிந்து, கழுத்தில் பெருங்காயத் துண்டுகளைக் கட்டித் திரிந்தார்கள் அதே அமெரிக்கர்கள். அதற்குப் பிறகு அவர்கள் அதனை 'கடவுளின் உணவு’ (Food of Gods) என பெயர் மாற்றியது வரலாறு. பறவைக் காய்ச்சலுக்கு இன்றளவிலும் பயன்படும் Symadineக்கு இணையான, வைரஸ் எதிர்ப்பு ஆற்றல் பெருங்காயத்துக்கு உண்டு என எகிப்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். காய்ச்சலை மட்டுமல்ல, கேன்சரையும் தடுக்கும் தன்மைகொண்டது பெருங்காயம் என ஆய்வு முடிவுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கிரீன் டீ, சிவப்பு ஒயின், கறுப்பு சாக்லேட், மாதுளை ரசம் இவற்றில் எல்லாம் உள்ள ஆன்ட்டி-ஆக்சிடென்ட் பெருங்காயத்தில் நிறையவே உள்ளது.

                                     கருஞ்சீரகமும் அப்படி ஓர் அற்புதமான மருந்து. சீரகம் பயன்படுத்தும் அளவுக்கு நம்மில் பலர் கருஞ்சீரகத்தைக் கண்டுகொள்வது இல்லை. இஸ்லாத்தின் தூதுவர் முகமது அவர்கள், மரணத்தைத் தவிர மற்ற அனைத்தையும் குணப்படுத்தும் என்று அன்றே குறிப்பிட்டது கருஞ்சீரகத்தைதான். அதன் எண்ணெய், கழுத்துப் புற்றுநோயைத் தடுப்பதையும், நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டுவதையும், கொஞ்சம் குணப்படுத்த கடினமான குடலின் Ulcerative colitis நோயைக் கட்டுப்படுத்துவதிலும் கருஞ்சீரகப் பயன் கண்டறியப்பட்டு வருகிறது. இதிலுள்ள THYMOQUINONE, வேறு எந்த தாவரத்திலும் இதுவரை கண்டறியப்படவில்லை என்கிறது Healing Spices நூல்.

                               யாருடைய துரத்தலுக்கோ எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் நாம், இந்தத் துரித வாழ்வில் தொலைத்தவை, ஜன்னல் காற்று, சைக்கிள் பயணம், முற்றத்து மாக்கோலம், மாடக்குழி விளக்கு, தோட்டத்து கிரேந்திப்பூ, கிணற்றுக் குளியல், திருவிழாக் களிப்பு மட்டுமல்ல... நம் நலவாழ்வையும்தான். கொஞ்சம் திரும்பிப் பார்த்து, வயோதிகச் சுருக்கங்களில் இன்னும் ஒட்டியிருக்கும் மிச்சத்தையாவது, எடுத்து ஒட்டிக்கொள்வோமே!

No comments:

Post a Comment