Monday, January 15, 2018

பார்த்தனின் பத்து பெயர்கள்




பார்த்தனின் பத்து பெயர்கள்



ஊர்வசியே கவர்ச்சியுறும்படியான அற்புத அழகைக் கொண்டவன் அர்ஜுனன். அவனுடைய பத்துப் பெயர்கள் அர்ஜுனப் பத்து என்று அழைக்கப்பட்டு இன்றும் 'சொன்னவர்களைக் காக்கும்' என்ற நம்பிக்கை கிராமப் புறங்களில் கூட உள்ளது.
அர்ஜுனன்
பல்குனன்
ஜிஷ்ணு,
கிரீடி
ஸ்வேதவாஹனன்
பீபத்ஸூ
விஜயன்
பார்த்தன்
ஸவ்யஸாசி
தனஞ்சயன்
என்ற பத்துப் பெயர்களும் அவன் குணத்தினால் அமைந்தவை. விராடபுத்திரனாகிய உத்தரன் அர்ஜுனனை யார் என்று தெரியாமல் அவனை வினவும் போது என்றுமே தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ளாத அர்ஜுனனே தன்னைப் பற்றிக் கூறி பெயர்களின் விளக்கங்களை அவனுக்குத் தருகிறான்:-
"
அனைத்துத் தேசங்களையும் ஜெயித்து அங்கிருந்து கொண்டு வந்த மிகுதியாகக் கொட்டிக் குவிந்த அந்த செல்வங்களின் - தனங்களின் மத்தியில் நான் நின்றதால் என்னை தனஞ்சயன் என்கின்றனர்.
யுத்தத்தில் யாரையும் வெல்லாமல் நான் திரும்பியதில்லை என்பதால் என்னை விஜயன் என்கின்றனர்.
என் ரதத்தில் பொன்மயமான கவசமுள்ள வெள்ளைக் குதிரைகள் கட்டப்பட்டிருப்பதால் என்னை ஸ்வேத வாஹனன் என்கின்றனர்.
இந்திரனால் கொடுக்கப்பட்ட கிரீடம் சூரியன் போல ஒளி வீசியிருக்கும்படி அதை நான் அணிவதால் கிரீடி என்கின்றனர்.
போரின் போது ஒருக்காலும் யாரும் அருவருக்கத்தக்கக் காரியத்தை நான் செய்வதில்லை என்பதால் என்னை பீபத்ஸூ என்கின்றனர்.
போரில் காண்டீவத்தை இழுக்கும் போது என் இரு கைகளும் ஒத்த செய்கை செய்தாலும் என் இடக்கை வலக்கையை விடச் சற்று மேலாக இருக்கிறது. ஆகவே என்னை ஸவ்யஸாசி என்கின்றனர்.
என்னுடைய தேகத்தின் நிறம் வேறு யாரும் அடைய முடியாமல் அருமையாக எனக்கு மட்டுமே உரியதாக இருக்கச் சிறந்த ரூபத்தை உடையதால் என்னை அர்ஜுனன் என்கின்றனர்.
நான் உத்தர பல்குனி, பூர்வ பல்குனி நட்சத்திரங்களின் சந்தியில் பிறந்ததால் என்னைப் பல்குனன் என்கின்றனர்.
என்னுடைய உடலிலாவது என்னுடைய தமையனார் உடலிலாவது ஒரு சொட்டு ரத்தத்தை ஏற்படுத்துவோரின் குலத்தையே நான் சும்மா விட மாட்டேன், அவமதிப்பேன் என்பதால் என்னை ஜிஷ்ணு என்கின்றனர்.
என் தாயார் ப்ருதை என்ற பெயர் உடையவள், அவளுக்குப் பிறந்ததால் என்னைப் பார்த்தன் என்கின்றனர்".


No comments:

Post a Comment