Monday, January 15, 2018

யார் நுகர்வோர்?




 


      ஒரு பொருளை (GOOD) அல்லது சேவையை (SERVICE) உரிய விலை(PRICE) அல்லது கட்டணம்(CHARGE) கொடுத்து சொந்த உபயோகத்திற்காக வாங்கும் அனைவரும் நுகர்வோரே!

       ஒரு பொருளை பெறும்போது அதற்கான விலையை முழுதாக கொடுத்தாலும், கொடுப்பதாக உறுதியளித்தாலும், விலையின் ஒரு பகுதியை செலுத்திவிட்டு மீதியை தவணை முறையில் செலுத்துவதாக ஒப்புக்கொண்டாலும் பொருளை பெற்றவர் நுகர்வோராக கருதப்படுவார்.
          இவ்வாறு ஒரு பொருளை விலை கொடுத்து அல்லது கொடுப்பதாக ஒப்புக்கொண்டு வாங்கியவர் தவிர அவருடைய அனுமதியுடன் அந்த பொருட்களை பயன்படுத்தும் அனைவரும் நுகர்வோராகவே கருதப்படுவார்.

                    அதேபோல, ஒரு சேவையை பெறுவதற்கு / பயன்படுத்துவதற்கு, அதற்கான கட்டணத்தை முழுமையாகவோ, தவணை முறையிலோ செலுத்துபவரும், அவ்வாறு செலுத்துவதாக ஒப்புக்கொண்டவரும் நுகர்வோராக கருதப்படுவர்.

           இந்த சேவைக்கான கட்டணத்தை செலுத்துபவரின் / செலுத்த ஒப்புக் கொண்டவரின் அனுமதியுடன் பயன்படுத்தும் அனைவரும் நுகர்வோர்கள்தான்

                            பொருட்களை சொந்த உபயோகத்திற்கு வாங்குபவர் மட்டுமே நுகர்வோராக கருதப்படுவார். அந்த பொருட்களை மீண்டும் விற்பதற்காகவோ, வணிக நோக்கத்திலோ வாங்குபவர் சட்டத்தின் பார்வையில் நுகர்வோராக கருதப்பட மாட்டார்.
                       அதேபோல சேவைகளிலும் கட்டணம் செலுத்தி சேவையை பெறுபவரே நுகர்வோராவார். இலவச சேவைகள் மற்றும் தனி ஒப்பந்தத்தின் கீழான பிரத்யேக தனிநபர் சேவைகள் ஆகியவற்றை பெறுபவர்களை நுகர்வோராக சட்டம் கருதாது.
                             இந்த நுகர்வோர் என்ற கருத்து தனியார் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் அரசுக்கும் பொருந்தும். அரசு நேரடியாகவோ, வேறு வகையிலோ தயாரிக்கும் / விற்பனை செய்யும் பொருட்களை (டாஸ்மாக் உட்பட) அதற்கான விலை கொடுத்து வாங்கும் அனைவரும் நுகர்வோர்கள்தான்.

                     அரசு நேரடியாகவோ, வேறு வகையிலோ அளிக்கும் சேவைகளை உரிய கட்டணம் செலுத்தி பயன்படு்ததும் அனைவரும் நுகர்வோர்தான். இந்த அடிப்படையில், ஒரு பொருளை - சேவையை உரிய விலை/கட்டணம் செலுத்தி வாங்கும் அனைவரும், அந்த பொருளில்/ சேவையில் குறைகள் இருந்தால் சட்டத்தின் துணையுடன் அந்த பொருளை/ சேவையை வழங்கியவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

         அரசுக்கு எதிராகவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த பொருள் / சேவை இலவசமாக வழங்கப்பட்டதாக இருக்கக்கூடாது. அதேபோல அரசோ, அரசு அதிகாரியோ தவறாக செய்த காரியத்திற்காகவோ, கடமையை செய்யத் தவறியதற்காகவோ நுகர்வோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது.
 

No comments:

Post a Comment