நேர்மறை எண்ணமும், எதிர்மறை எண்ணமும்
நல்ல சிந்தனை வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி இருக்கிறது. கெட்ட சிந்தனை எளிதில் வருகிறது. ஒரு கண் பார்வையற்ற மனிதன் மலை ஏறி சிகரத்தைத் தொட்டான் என்று செய்தி வந்தால் கூடப் பெரிய ஊக்கம் தோன்றுவதில்லை.
சாதிச் சண்டையில் சதக் சதக் என்று குத்தினான் என்றால் ஆர்வமாய்ப் படிக்கிறோம். டி.வி நிகழ்ச்சியில் ஒரு பொருளாதார நிபுணர் பேசினால் அலுப்பு வருகிறது. ஆனால், அதிலேயே ஒரு மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்தினால் கண் இமைக்காமல் பார்க்கிறோம்.
ஒருவரைப் பயமுறுத்துதல் எளிது. பெரிய அறிவு ஏதும் வேண்டியதில்லை. ஒரு பொய்த் தகவல் கூடப் போதும். ஆனால் ஒருவரை மகிழ்விப்பது பெரும் பணி. நிறைய திறன் தேவைப்படுகிறது.
அதே போல, கோபப்படுத்துவதும் எளிது. ஒரு சிறு கொசு கூட அதைச் செய்ய முடியும். உங்களுக்கு வேண்டாதவர் பற்றிய சிறு எண்ணம் கூடப் போதும். அதனால் தான் மிகச் சிறிய தூண்டுதலில் கூடப் பெரும் வன்முறைகள் நடந்து விடுகின்றன.ஏன் இப்படி? நம் மூளை அப்படி உருவாகி உள்ளது. அது தான் காரணம். அடிப்படையில் நம் மனித மூளை இன்னமும் பிரதானமாக ஒரு மிருக மூளை தான். மிருகத்தின் முக்கியத் தேவைகள் தன் உயிர் காப்பதும், இரை தேடுவதும், இனப்பெருக்க உணர்வும் தான். அதற்குத் தேவையான செயல்பாடுகள் அடிப்படையான ஆதார உணர்வுகளைச் சார்ந்தவை.
No comments:
Post a Comment