Thursday, January 20, 2022

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!

 சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!

           தானம் செய்வதில் தர்மர் எப்போதும் வல்லவர், ஆனால் அனைவரும் கர்ணனின் புகழையே பெருமையாக பேசினர். இதனால் அதிருப்தி அடைந்த அர்ச்சுனன், கிருஷ்ணனிடம் போய் முறையிட்டான். கிருஷ்ணனும் யோசித்து விட்டு,  "வா அர்ச்சுனா, நேரில் சென்றே பார்த்து விடுவோம்" என கூறி அந்தனர் வேடமிட்டு இருவரும் சென்றனர்.

          முதலாவதாக, தருமரின் அரண்மனைக்குச் சென்று, "தருமரே, நாங்கள் சமைக்க விறகு வேண்டும், மழை பெய்து கொண்டிருப்பதால் விறகு கிடைக்க வில்லை. சிறிது விறகு தானமாக கொடுங்கள்" என கேட்டனர்.

         தருமரோ, "அந்தணர்களே, அரண்மனையில் இருந்த விறகுகள் சமைக்க பயன்படுத்தப்பட்டு விட்டன, மழை பெய்வதால் தற்போது விறகு வெட்டவும் முடியாது, அதனால் நீங்கள் தாராளமாக இங்கு சாப்பிட்டு செல்லுங்கள்" என்றார். அதற்கு அவர்களோ, "பரவாயில்லை அரசரே, நாங்கள் வருகிறோம்" என்று கூறி அங்கிருந்து சென்றனர். செல்லும் வழியில், "அண்ணனிடம் இல்லாததை கேட்டால் அவரால் எப்படி தர இயலும்?" என அர்ச்சுனன் கேட்டான். அதற்கு கிருஷ்ணரோ, சிரித்துக் கொண்டே கர்ணனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.

           கர்ணனிடமும் அதே போல், விறகு வேண்டும் என கேட்டனர். இதோ இருங்கள்என கூறி விட்டு தன் வில்லை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான் கர்ணன். திரும்பி வரும் பொழுது கைகள் நிரம்ப விறகுகள் எடுத்து வந்தான். மழை பெய்யும் போது, விறகு எப்படி கிடைத்தது என அந்தனர்கள் கேட்டனர். அதற்கு கர்ணனோ, சிரித்துக் கொண்டே, "அந்தணர்களே, என் அரண்மனையில் விறகு இல்லை, ஆனால் என்னிடம் "தானமாக" கேட்டதைஇல்லை என நான் கூறியது இல்லை. ஆதலால், என் வில்லை பயன்படுத்தி, என் அரண்மனையில் இருந்த கதவு, சன்னல்களை உடைத்து இதை எடுத்து வந்தேன்" என கூறினான்.

           அதை பெற்ற இருவரும் புறப்பட்டனர்இதை என் அண்ணனாலும் செய்ய முடியுமே என அர்ச்சுனன் கேட்டான். கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே, "செய்ய முடியும் " என்பதற்கும், "செய்வதற்கும்" நிறைய வித்தியாசம் உள்ளன என்றார். அர்ச்சுனன் வெட்கித் தலை குனிந்தான்.

          நியதிதானம் கேட்டு வருபவர்களுக்கு என்ன தருகிறோம், எவ்வளவு தருகிறோம் என்பது முக்கியமல்ல. உங்களிடம் இருப்பதில் எவ்வளவு தருகிறீர்கள் என்பதே முக்கியம்.

           இறுதி போரில், பதினேழாம் நாள் முடிவில், கர்ணன் வீழ்ந்து கிடந்தான். ஆனால் உயிர் பிரிய வில்லை. ஏனெனில், அவன் செய்த தானத்தின் பலன்கள் கர்ணனின் உயிரை காத்து நின்றது. இதை உணர்ந்த கிருஷ்ணர், அந்தணர் வேடமிட்டு வந்து, அந்த தானத்தின் பலனைதனக்கு வேண்டும் என தானமாக கேட்டார்.

               இதை கேட்டதும் சிரித்த கர்ணன், தன் இரத்தத்தை எடுத்து "நான் இதுவரை செய்த, செய்யும்இனி செய்ய போகும் தானம் அனைத்தின் பலனும் உம்மையே சாரும்" என கொடுத்தான். பிறகு கர்ணனின் உயிர் பிரிந்தது.

        ஆனால்அந்த தானத்தை கொடுக்கும் பொழுதுமனிதன் கர்ணனின் கை உயர்ந்ததுதானத்தை பெறும் பொழுது கடவுள் கிருஷ்ணரின் கை தாழ்ந்தது. தானம் செய்யும் கரங்களை உயர்த்த, கடவுள் தன் கையை தாழ்த்திக் கொள்ளவும் தயங்க மாட்டார். (மாய கிருஷ்ணா..!)

*சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!*



No comments:

Post a Comment