தஞ்சை பெரிய கோயில்
உலகில் உள்ள சிவாலயங்களுக்கெல்லாம் மகுடமாக விளங்கும் தஞ்சைப் பெரியகோயில் வான் கயிலாய பர்வதமாகவே விளங்குகின்றது. அத்தகைய வான்கயிலாயத்தின் நடுவே மகாமேரு சிகரமும்,அதன் நாற்புறமும் இமவான்,மால்யவான்,ச்வேதன்,கந்தமாதனம் என்று நான்கு சிகரங்களைக் கொண்டு விளங்குகிறது.இவ்வமைப்பில்தான் நம் தஞ்சை பெரிய கோயில் விளங்குகிறது.216 அடிகள் உயரமுள்ள ஸ்ரீ விமானம் மகாமேரு பர்வதமாக விளங்குகின்றது. உயர்ந்த இக்கோபுரத்தின் நான்கு திசைகளிலும் இப்பீடத்திலிருந்து முன்னோக்கி பிதுக்கம் பெற்ற கட்டுமான அமைப்புக்கள் காணப்படுகின்றன.அவை முறையே
இமவான்,மால்யவான்,ச்வேதன்,கந்தமாதனம் ஆகிய அமைப்புகளாகும். இங்கு நாற்புறமும் கருவறைக்குள் செல்லும் வாயில்கள் உள்ளன.இவ்வாயில்கள் வடமொழியில் சர்வோதபத்ரம் என்றும் தமிழில் ஈசன் திருநிலைவாயில்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விமானத்தைச் சுற்றி திருச்சுற்று மாளிகையும், அதனுடன் எண் திசைத் தெய்வங்களான,இந்திரன்,அக்னி,இயமன்,நிருதி, வருணன்,வாயு, சோமன், ஈசானன் ஆகியோரது கோயில்களும் வெளி ஆபரணமாகத் திகழ்கிறது. இதனை லோகபாலர் ஆவரணம் என்பர்.அடுத்து உள்சுற்றில், நந்தி, மகாகாளன்,விருசபம்,தேவி,பிருங்கி, கணபதி,அறுமுகன், சண்டிகசுவரர் ஆகிய எண்மர் உள்ளனர்.இச்சுற்றை, கணாவரணம் என்பர். மூலவிமானத்தில் மூன்று அடுக்குகளாய் தெய்வநிலைகள் உள்ளது.முதல் சுற்றில், சிவபெருமானின் ஐந்து வடிவங்களான,தத்புருடம், அகோரம்,சத்துவம்,வாமம், ஈசானம் ஆகியவையுள்ளன.
இரண்டாம் சுற்றில் (அடுக்கு) வித்தியாதரன்,மூர்த்திசுவரன், இராசராசேசுவரன், உருத்திரன் என முப்பத்தாறுக்கும் மேற்பட்ட வில்அம்பு ஏந்திய தெய்வங்கள் உள்ளனர்.அடுத்த ஆவரணத்தில்(அடுக்கு) தசாயுதபுருடர்கள் எனப்படும் பத்து தெய்வங்கள் காத்து நிற்கும் சுற்றாகும்.இவர்கள் வாயிலுக்கு இருவராக,மூலவிமானம் மற்றும் முதன்மை மண்டபத்தைக் காத்து ஐந்து வாயில்களில் நிற்கின்றனர். இவர்கள் சிவபெருமானின் பத்து ஆயுதங்களான,வச்சிரம்,சத்தி, தண்டம்,கொடி, சூலம்,அங்குசம்,கதை, பாசம்,கத்தி,சக்கராயுதம் ஆகியவற்றை ஏந்தியவாறு நிற்கின்றனர். இவையனைத்தும் வான்கயிலாயத்தின் அமைப்பே ஆகும்.இவ்வமைப்பு முறை மாறாமல் எடுக்கப் பெற்றுள்ள ஒரே கோயில், தஞ்சைப் பெரிய கோயில்தான். இக்கோயிலினை வலம் வந்தால் ஒரு சேர இமயமலையிலுள்ள பூலோக கயிலாயத்தையும்,விண்ணகத்திலுள்ள வான் கயிலாயத்தையும் வலம் வந்த பேறு நமக்குக் கிட்டும்.
No comments:
Post a Comment