Sunday, January 9, 2022

குழந்தைகளுக்கு முன்னால் இதையெல்லாம் செய்யாதீர்கள் ப்ளீஸ்!

 குழந்தைகளுக்கு முன்னால் இதையெல்லாம் செய்யாதீர்கள் ப்ளீஸ்!

                       தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போல சேலை என்ற புராதானப் பழமொழி ஒன்று உங்கள் நினைவில் இருக்கலாம். ஒரு பிள்ளை நல்லவனாக மாறுவதும் தீயவனாக கெட்டு அழிவதும் அன்னையின் வளர்ப்பில்தான் உள்ளது என்றும் கூறுவார்கள். ஏனிப்படி பெண்களையே பழி சொல்கிறார்கள் என்று நானும் நினைப்பதுண்டு. ஆனால் யோசித்து பார்த்தால் ஒரு குழந்தை பெரும்பாலான நேரத்தை தாயுடன் தான் செலவிடுகிறது.

மனத்துக்கு மிக நெருக்கமான உறவு அனைவருக்குமே அம்மா தான். எனவே அவளைப் பார்த்து வளரும் குழந்தைகள் தங்களுடைய இயல்பில் குணத்தில் பெரும்பாலனவற்றை அவளிடமிருந்து பெறுகிறது. ஆனாலும் ஒரு மனிதன் நல்லவனாக சமுதாயத்தில் வாழ்வதற்கு பெற்றோர் இருவரின் பங்களிப்பு அவசியம்.

வீட்டுப் பிரச்னைகள்

வீட்டுக்கு வீடு வாசப்படிதான். எல்லோரது வீட்டிலும் விதம் விதமான பிரச்னைகள் தோன்றியும் மறைந்தும் கொண்டிருக்கும். காலமெனும் சாகரத்தில் பிரச்னைகள் தான் அலைகள். அலைகளுக்கு ஏது ஓய்வு என்ற புரிந்துணர்வுடன் பெற்றோர்கள் செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு முன்னால் பிரச்னைகளைப் பற்றி பேசுவது, விவாதிப்பது அல்லது சண்டை போடுவது அவர்களது மனத்தில் எதிர்மறை உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.

மேலும் உறவினர்கள் முன்னிலையில் அல்லது அண்டை வீட்டார் இருக்கும்போதும் வீட்டினர் சண்டை போடக் கூடாது. அது அவர்களுக்குள் ஒரு தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்திவிடும். பூப்போன்ற மனத்தையுடைய குழந்தைகள் மனம் வெம்பிப் போவதுடன், மற்றவர்களிடம் எப்படி பழகுவது என்றே குழம்பிப் போவார்கள். தேவையற்ற பகைமை மனநிலை வளர இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக அமைந்துவிடலாம். எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் முன்னிலையில் எந்தவொரு செயல்களை செய்யும்போதும் ஆயிரம் முறை யோசித்தபின்னரே செயல்படுத்தவேண்டும்.

கெட்ட வார்த்தைகள்

குழந்தைகளுக்கு கேட்குமாறு வசை மொழிகள் மற்றும் ஆபாச வார்த்தைகளையும் ஒருபோதும் பேசாதீர்கள். மற்றவர்களைப் பற்றி புறம் கூறுவது, கேவலமாகத் திட்டுவது, அல்லது சாபம் அளிப்பது போன்ற செயல்களில் பெற்றோர் ஈடுபடும் போது குழந்தைகள் அதனைக் கவனித்து தாமும் அதே போன்று செய்யத் தொடங்கும். இளம் மனங்களில் விஷ விதையை விதைப்பதற்குச் சமம் இது. மேலும் அவர்கள் கெட்ட வார்த்தையை உங்களின் முன்னிலையில் பிரயோகப்படுத்தும் போது அதை நீங்களும் தட்டிக் கேட்க முடியாது. இதுக்கு மீனிங் எல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கதானே அன்னிக்கு அந்த அங்கிளை அப்படி சொன்னீங்க...என்று ஒரே போடாக போட்டு உங்கள் வாயை அடைத்துவிடுவார்கள்.

எதிர்மறை சொற்கள்

நீ படிக்க மாட்டே, நீ முட்டாள் போன்ற எதிர்மறை வார்த்தைகளை ஒருபோதும் அவர்களிடம் பயன்படுத்தாதீர்கள். மாறாக உன்னால் முடியும், இப்ப இல்லைன்னா அடுத்த தடவை நீ ஜெயிப்பே பரவாயில்லை என்று தட்டிக் கொடுத்து வளருங்கள். பிறர் மத்தியில் உங்கள் குழந்தைகளை தாழ்த்தி பேசாதீர்கள். பொய் பேசுவது, அடுத்தவரைக் குறை கூறுவது, சிகரெட் அல்லது மது அருந்துவது என அவர்களின் முன்னிலையில் நீங்கள் நிகழ்த்தும் எதுவொன்றும் உங்கள் பின்னால் அவர்கள் ஆர்வத்துடன் செய்ய முனைவார்கள்.

பத்து வயது பிள்ளைகள் டாஸ்மாக் கடைகளில் நிற்கும் அவலம் இதனால் தான் நிகழ்கிறது. இந்த வருடத் தொடக்கத்தில் இளைஞர்கள் புத்தாண்டை மது அருந்திக் கொண்டாடிய சதவிகிதம் முன்னெப்போதையும்விட மிக அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிபரம். இதற்கெல்லாம் காரணம் வெளியில் இல்லை வீட்டில் தான் உள்ளது என்பதை பெற்றோர் மறக்க வேண்டாம்

No comments:

Post a Comment