நல்லதொரு குட்டிக் கதை
முன்னொரு காலத்தில் நல்ல குணமும் ஒழுக்கமும் நிறைந்த மனிதன் ஒருவன், தன் மனைவி குழந்தைகளோடு புனித யாத்திரை மேற்கொண்டார். பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. புனித யாத்திரையை அவர் மேற்கொண்ட காலமோ, கடுமையான கோடை காலம் ஆகும்.
பல மைல்கள் தூரம் கடந்த பிறகு, அவர்கள் கொண்டு வந்து இருந்த தண்ணீரும் காலியாகி விட்டது. குடும்பமே தண்ணீர் தாகத்தால் வருந்தியது. கடுங்கோடை என்பதால் வழியில் எங்குமே தண்ணீர் இல்லை. குழந்தைகள் தாகத்தால் தவித்தனர். இந்த மனிதனுக்கோ எப்படி இந்த பிரச்சனையைத் தீர்ப்பது என்று தெரியாமல் தவித்தார். எந்த வழியும் தெரியாமல், கடவுளிடம் முறையிட ஆரம்பித்தார். கடவுளிடம், ஓ பிரபுவே! தயவு செய்து இந்த சூழ்நிலையை சமாளிக்க நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார். சிறிது நேரத்தில், கண்ணுக்கு எட்டிய தூரத்தில், ஒரு சந்நியாசி ஓரிடத்தில் உட்கார்ந்து தியானம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரிடம் சென்று தன் பிரச்சனையைக் கூறினார். சந்நியாசி அவரிடம், “இங்கிருந்து ஒரு மைல் தொலைவில் ஒரு சிறிய ஆறு வடக்கு நோக்கி பாய்ந்து செல்கிறது. நீ அங்கு சென்று, உங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ளலாம்” என்றார். அந்த மனிதன் இதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். சந்நியாசிக்கு நன்றி கூறினான்.
அவனது மனைவியாலோ அல்லது குழந்தைகளாலோ இனிமேல் ஒரு அடி கூட நடக்க முடியாத நிலையில் இருந்தனர். அவர்களை அங்கேயே இருக்க வைத்து விட்டு, அந்த மனிதன் தண்ணீர் கொண்டு வரச் சென்றான். தண்ணீரை எடுத்துக் கொண்டு திரும்பி வரும்போது, அவன் எதிரே ஐந்து பேர்கள் வந்தனர். அவர்களும் கடுமையான தாகத்தால், தவித்த படி இருந்தனர். அந்த மோசமான நிலையில், அவர்களைப் பார்த்த, அந்த நல்ல மனிதன் தான் கொண்டு வந்த தண்ணீர் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்து விட்டு மீண்டும் ஆற்றுக்கு சென்றான்.
இரண்டாவது முறையாக தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் போது, திரும்பவும் தாகத்தால் தவிக்கும் சில பேரை பார்க்கிறான். திரும்பவும் தண்ணீரைக் கொடுத்து விடுகிறான். மூன்றாவது முறையாக தண்ணீரை எடுத்துக் கொண்டு தன் குடும்பத்தினரிடம் வருகிறான். மனைவியும், குழந்தைகளும் மயக்கம் அடைந்து கீழே விழுந்து கிடக்கின்றனர். உணர்விழந்த நிலையில் கிடக்கும் அவர்கள் முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழுப்பிப் பார்க்கிறான். அவர்கள் விழிக்கவே இல்லை.
அவன் அழுது கொண்டே, அந்த சந்நியாசியிடம் ஓடிச் சென்று, அவர் பாதங்களில் விழுந்து கதறுகிறான். “நான் என்ன பாவம் செய்தேன்? என் குடும்பம், இந்த நிலையில் இருக்கிறதே! நான் தாகத்தில் தவிக்கும் மற்றவர்களுக்கு உதவிதானே செய்தேன்; அது ஒரு புனிதமான செயல் தானே... என் குடும்பத்தினரைக் காப்பாற்றுங்கள்”.
சந்நியாசி அவனைப் பார்த்து, “ஓ புண்ணிய ஆன்மாவே! நீ ஆற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீரை, தாகத்தோடு வந்த மற்றவர்களுக்குக் கொடுத்து உன் பாத்திரத்தைக் காலிப் பாத்திரம் ஆக்கினாய். இதிலிருந்து, உனக்கு என்ன நன்மை கிடைத்தது?”
அந்த மனிதன், “உதவி செய்வதால் என்ன கிடைக்கும் என்பதை நான் ஒரு போதும் நினைத்துக் கூட பார்ப்பது இல்லை. எனக்கு சரி என்று நான் உணர்ந்ததை செய்தேன். எந்த சுய நலமான எண்ணமும் எனக்கு இல்லை” என்றான்.
அதற்கு சந்நியாசி, “ இந்த மாதிரி நீ செய்த நல்ல காரியங்களுக்கும், நல்ல கருத்துக்களுக்கும் என்ன பயன் கிடைத்தது? நீ உன்னுடைய கடமையை நிறைவேற்றாமல், உன்னுடைய மனைவி, குழந்தைகளுக்கு நீ உதவி செய்யாமல் மற்றவர்களுக்கு உதவி செய்வது எப்படி நன்மை தரும்? நல்ல செயல்களை செய்வதற்கு நீ இன்னும் சரியாக கற்க வில்லை. நான் செய்த மாதிரி, நீ செய்திருக்க வேண்டும்” என்றார்.
எப்படி என்று அந்த மனிதன் ஆவலாகக் கேட்டான். அதற்கு சந்நியாசி அவனைப் பார்த்து, “நீ என்னிடம் தாகத்தைத் தணிக்க வழி கேட்ட போது, நான் உனக்கு தண்ணீர் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக ஆற்றுக்குச் செல்லும் பாதையை காட்டினேன். இது போல் உன்னிடம் தாகமாக வந்தவர்களை நீயும் ஆற்றுக்குச் செல்ல வழி காட்டி இருக்க வேண்டும். அவர்களும் ஆற்றில் சென்று தாகத்தைத் தணித்து இருர்கள். யாருமே, மற்றவர்களுக்காக, தங்கள் பாத்திரங்களை காலியாக்க மாட்டார்கள்.” இந்த அறிவுரைகளை அவனுக்கு வழங்கி விட்டு, அவனது குடும்பத்தினர்களுக்கும் ஆசிகளைக் கொடுத்து விட்டு, அவர் மறைந்து விட்டார்.
அந்த மனிதன் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டான். அவனுக்கு இப்போது எல்லாம் தெளிவாகப் புரிந்து விட்டது. நம்முடைய பொறுப்புக்களைக் கவனிக்காமல், எந்த நல்ல காரியத்தையும் செய்வதில் அர்த்தம் இல்லை என்பதை புரிந்து கொண்டான். நமது கடமைகளை நன்கு செய்து அதன் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருந்து, நல்ல வழிமுறையையும் அவர்களுக்குக் காட்ட வேண்டும். விவேகத்தோடு நாம் உதவி செய்ய வேண்டும். கடவுளின் பாதையையும், உண்மையின் வழியையும் மற்றவர்களுக்குக் காட்டுவதே மிகச் சிறந்தது.
கருத்தை உள்வாங்கி,புரிந்து நடப்போம்.
படித்ததில் பிடித்தது..
No comments:
Post a Comment